ஜோக்கரால் ஏற்பட்ட குழப்பம்

you just could'nt let me go
this is what happens when an unstoppable force meets an immovable object

இந்த வார்த்தைகள் உலக அரங்கமே ரசித்த ஜோக்கர் பேட்மேனிடம் கூறுவது. அவன் கூறுவது எதற்காக எனில் ஜோக்கர் பல மாடி கட்டிடங்களிலிருந்து கீழே விழுகிறான். அவனை சாகவிடாமல் பேட்மேன் மேலே இழுக்கிறான் அப்போது தான் இந்த வசனம்.

சின்ன விஷயத்தினை கூறி சொல்ல நினைத்த விஷயத்திற்கு வருகிறேன். யதேச்சையாக The dark knight rises படத்திற்கு என் நண்பனோடு அது வெளிவந்த நேரத்தில் சென்றேன். அப்போது தான் கிறிஸ்டோபர் நோலன் என்னும் அப்பட இயக்குநர் எனக்கு பிடித்து போனது. அவரது படங்களை பார்க்க வேண்டும் என நண்பர்களின் மூலமாக The dark knight, inception, the prestige என முன்று படங்களை பார்த்தேன். நோலன் என் மனதில் நீங்காத இடத்தினை பிடித்துவிட்டார். அதுவும் குறிப்பாக inception படத்தில். கிடைத்தால் மறக்காமல் பாருங்கள்.

இப்போது மீண்டும் ஆரம்பத்திற்கு வருகிறேன். ஜோக்கரின் வசனம் இடம்பெரும் படமான The dark knight படத்தினை முதலில் பார்க்கும் போதே இந்த வசனத்தில் என் கவனம் நின்றது. ஐந்தாறு முறைகள் இந்த வசனத்தினை மட்டுமே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அந்த வசனப்படி நடந்தால் என்ன நடக்கும் என யோசித்தேன். அஃதாவது - what happens when an unstoppable force meets an immovable object ? இக்கேள்விக்கான பதிலினை இணையதளத்தினில் தேடினேன். இதை பற்றி நண்பர்களிடம் பேசலாம் என ஆசை தான். ஆனால் நோலன் மற்றும் ஜோக்கரின் புராணமாகவே கடந்த ஒரு வார காலம் கழித்துவிட்டேன். அதனால் பேசாமல் அனைத்து பதில்களையும் என் பதிவில் போடலாம் என முடிவு செய்தேன். அதன் விளைவே இது. 

இதனை paradox என்கின்றனர். ஆங்கிலத்தில் வீக் என இணையத்தில் தேடினேன். அங்கு சொன்ன அர்த்தமும் அடியேனுக்கு புரியவில்லை. தோழிகளிடம் கேட்டேன். ஒரு வாக்கியத்தினை சொல்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள் அந்த வாக்கியத்திலேயே நேர்மறையும் எதிர்மறையும் அடங்கியிருக்கிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் குழப்பும் தன்மையினை உடையவை. இப்படிப்பட்ட ஒரு வாக்கியத்தினை கேள்வியினை எழுப்பியது யாராக இருக்கும் என அறிவியலையே சுவாசிக்கும் நண்பனிடம் கேட்டேன். அவன் அடுத்த நாள் ஆர்க்கிமெடிஸ் என்றான். எனக்கு அப்போது சந்தேகம் வந்தது. இவர்தான் கண்டு பிடித்ததா என. அப்போது தான் தேட ஆரம்பித்தேன். பதில்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தது.

இதற்கான ஆரம்பம் அஃதாவது குழப்பமான தத்துவங்களுக்கான ஆரம்பம் சீனக்கதையில் தொடங்குகிறது. சந்தையில் ஒருவன் வாளும் கேடயத்தினையும் விற்றுக் கொண்டிருக்கிறான். வாங்க வந்த ஒருவனிடம் ‘இந்த வாள் எப்படி பட்ட கேடயத்தினையும் உடைத்துவிடும் மேலும் இந்த கேடயம் எப்படிப்பட்ட வாளுக்கும் உடையாமல் நிற்கும்’ அப்போது அவன் கேட்டான் ‘இவை இரண்டும் எதிர்மறையாக இருப்பின் யார் ஜெயிப்பர்’ பதில் தெரியாமல் முழித்தான். அதே தான் இங்கும். இப்படிப்பட்ட விஷயங்களுக்கு paradox-களுக்கு நிறைய பதில்கள் கிடைக்கின்றன. சில நேரங்களில் அவைகள் கேள்விகளுடன் வெறும் அனுமானங்களாக மாறிவிடுகிறது. அப்படி ஜோக்கர் கூறிய அந்த தத்துவத்திற்கும் நிறைய அனுமானங்கள் இருக்கிறது.
  • அதனை கடவுளுடன் ஒப்பிடுகின்றனர். கடவுள் அவராலேயே உடைக்கமுடியாத கல்லினை உருவாக்குவாரா ? அப்படியே உருவாக்குகிறார் என வைத்துக் கொள்வோம். உடைக்கமுடியாத கல்லினை உருவாக்கிய கடவுள் நிறுத்த முடியாத விசையினையும் உருவாக்கியிருப்பார். அப்படியிருக்கையில் அவை இரண்டும் மோதினால் . . .
  • இப்போது அறிவியல் பக்கம் கூறப்படும் பதிலினை பார்க்கலாம். அசைக்கமுடியாத பொருள். அப்படிப்பட்ட பொருளில் நிலைமம்(inertia) என்னும் விதி அதீதமாக கணக்குகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்க வேண்டும். அதே நிறுத்த முடியாத விசை என்னும் பட்சத்தில் உந்தம்(momentum)  அதீதமாக கணக்குகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்க வேண்டும். அப்ப்டி இருக்கும் பட்சத்தில் அந்த விசை மோதும் போது ஏற்கனவே தன்னிடம் உள்ள ஆற்றலை காட்டிலும் இன்னும் அதீத ஆற்றலை உள்வாங்கிக் கொண்டிருக்கும். அந்த ஒரு நிலையில் இரண்டுமே உள்ளது உள்ளபடி அப்படியே நிற்கும். ஆனால் சமநிலை அடையுமா எனில் அது மற்றொரு கேள்விக் குறி ஏனெனில் முடிவற்ற கணக்குகளற்ற ஆற்றலுடன் அவை மோதிக் கொண்டிருக்கின்றன. ஆக ஆற்றல் பரிமாற்றம் மட்டுமே நிகழும்.
  • முன்பு சொன்ன அதே விஷயத்தினை சற்று காலநேரத்தினை கணக்கில் கொண்டு சொல்லப்பட்ட பதில் ஒன்று எனக்கு கிடைத்தது. அப்படி அவ்விரண்டும் நெருங்கும் போது நேரம் மிக குறைந்து இரண்டும் மோதாமல் அப்படியே ஸ்தம்பித்து நிற்கும். அப்படி மோதினால் அவ்விரண்டின் தன்மை மாறாமல் இவ்வுலகம் இரண்டாக பிளவுபடும். ஒன்று அந்த நிறுத்த முடியாத விசையினை கொண்டு மற்றொன்று அசைக்க முடியாத பொருளினை கொண்டு.
  • ஐஸக் அசிமோவ் ஏதோ ஒரு புத்தகத்தில் கூறியிருக்கிறாராம் - இந்த கேள்வியே இருக்க வாய்ப்பில்லை என்று. அவர் சொல்ல வருவது நம்ம ஊர் வழக்கப்படி சொல்லப்படும் ‘கல்லக் கண்டா நாயக் காணோம் நாயக் கண்டா கல்லக் காணோம்’. ஒருவகையில் என் மனமும் இந்த பதிலின் பக்கமே நிற்கிறது. ஆனால் இதற்கு பிறகு இன்னும் இரண்டு அனுமானங்கள் கிடைத்தது.
  • முன்பை போலவே இரண்டையும் தனித் தனியாக எடுக்க வேண்டும். நிறுத்தமுடியாத விசைக்கு எல்லையற்ற ஆற்றல் தேவை. நமது பூமியே எல்லைகளால் முடிந்து விடுகிறது. அப்படியிருக்கையில் அதனைத் தாண்டிய ஆற்றல் எங்கிருந்து வரும். ஆகையால் இது தோற்று விடுகிறது. அடுத்து அசைக்க முடியாத பொருள். பூமியில் இருக்கும் அனைத்து பொருளும் அசைந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி அசைக்கமுடியாத பொருள் வேண்டுமெனில் அது இருப்பதிலேயே பெரிதாக இருக்க வேண்டும். அப்படி பெரிதாக இருந்தால் அதன் எடை எல்லையற்றதாக இருக்கும். இந்த ஒரு நிலையில் அந்த எடையினாலேயே அப்பொருள் உருக்குலைந்து கருந்துளையினை(black hole) உருவாக்கிவிடும். கருந்துளை என்பது என்னவெனில் விண்வெளியில் இருக்கும் ஒரு இடம். அங்கு புவியீர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் அந்த பொருளின் திடம் கூட அதற்குள்ளேயே சென்று விடுகிறது. இக்கருந்துளையிலிருந்து வெளிச்சம் கூட வெளியே செல்ல முடியாது.
  • என் நண்பன் கூறிய அனுமானமோ இதற்கு நேர்மாறான வெந்துளை(white hole). அதன் தன்மை அதனுள் இருக்கும் பொருளும் வெளிச்சமும் வெளியே செல்லலாம் ஆனால் எதுவும் உள்ளே நுழைய முடியாது.
கடைசி இரண்டு அனுமானங்களும் நிறைய நம்பகத் தன்மையினை தன்னுள் கொண்டிருக்கிறது. அவை இரண்டும் தன்னுள் சுமந்து கொண்டிருக்கும் மற்றொரு விஷயம் விசையினை இரண்டுமே கணக்கில் கொள்ளவில்லை. கடைசி இரண்டும் மீதமுள்ளதை முறியடித்து விடுகிறது. ஏனெனில் விசையினை இந்த ஆட்டத்திற்குள் நுழைக்கவே முடியாது. பொருள் மட்டுமே கொண்டு வரமுடியும். அப்படியிருக்கையில் ஒரு தத்துவம் தோற்றால் மட்டுமே இதற்கான பதில் கிடைக்கும். அதுவும் மூன்றில் ஒன்று - இரண்டு உலகம், கருந்துளை அல்லது வெந்துளை.

நானும் சாதாரணமாக படத்தினை பார்த்து சந்தோஷமாக சென்றிருக்கலாம். அதிகமாக சென்று இப்படி தேடி அதை பகிர ஆள் இல்லாமல் இங்கு பதிவிருகிறேன். எப்படியோ பல கேள்விக் குறிகள் மூன்று பதில்களுடன் முடிந்தது. நிம்மதியாக தூங்குவேன். இன்னும் பதில் கிடைத்தால் பதிவிடுகிறேன். . . .

Share this:

CONVERSATION