எக்ஸிஸ்டென்ஷியலிஸம்

சென்ற கட்டுரையில் நீண்ட தூரம் என் தனிப்பட்ட சந்தோஷங்களை எழுதியிருந்தேன். அது இன்னும் முடிவடையவில்லை. தொடர்ந்து கட்டுரை தொகுப்புகள் வாசித்துக் கொண்டிருந்த நேரத்தில் ‘வரம்பு மீறிய பிரதிகள்’ என்னும் புத்தகத்தினை வாசிக்கலாம் என நினைத்தேன். அதே அஜந்தா புத்தக நிலையத்திற்கு சென்றேன். அது அங்கு நான் சென்ற அன்று இல்லை. அங்கே நமக்கு என்ன புத்தகம் வேண்டுமோ அதன் பெயரினை பதிவு செய்து விட்டு வரலாம். அதன் படி நானும் பதிவு செய்தேன். இரண்டு வாரங்கள் கழித்து கேட்ட போது அந்த கடைக்காரர் என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை அந்த மாதிரி புத்தகங்களெல்லாம் இங்கு வருவதில்லை என்றார். எனக்கு அந்த பதில் தூக்கிவாரி போட்டது. வேறு என்ன செய்ய முடியும். என்னால் அவர் சொல்ல வந்ததன் அர்த்தமே புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தும் அவர் கூறியதை கேட்டு வந்துவிட்டேன். அதன் பின் உயிர்மையிலேயே  வாங்கிவிடலாம் என முடிவு செய்தேன். அன்றிலிருந்து எப்போதும் அங்கேயே வாங்க ஆரம்பித்தேன். அதிலும் ஒரு பிரச்சினை திடிரென முளைத்தது
.
அப்போது நான்கு புத்தகம் ஆர்டர் செய்திருந்தேன் என நினைக்கிறேன். அதில் ஒரு புத்தகத்தினை தவிர மற்ற புத்தகங்கள் வந்துவிட்டது. ஏன் அனுப்பவில்லை என்றவுடன் அந்த புத்தகம் பிரதி இப்போது இல்லை என்னும் பதில் எனக்கு கிடைத்தது. எனக்கா எரிச்சல் தாங்க முடியவில்லை. அப்போது என்னிடம் சாருவின் அலைபேசி எண் இருந்தது. இந்த பிரச்சினையினை குறுந்தகவலாக அனுப்பினேன். ஐந்தே நிமிடத்தில் எனக்கு அவரிடமிருந்து அழைப்பு வந்தது. சந்தோஷத்தில் அவரிடம் அப்போது தான் கூறினேன் தங்களின் நாவல்களை வாசிக்கலாம் என்றிருக்கிறேன் என. உடனே அவர் எக்ஸிஸ்டென்ஷியலிஸ்மும் பேன்ஸி பனியனும், ஸீரோ டிகிரி, ராஸலீலா, காமரூப கதைகள் என்னும் வரிசையில் வாசிக்கச் சொன்னார். அப்போது தேகம் நாவல் வந்திருக்கவில்லை. எனக்கோ பிரமிப்பு என்னடா இது நாவல் வாசிப்பதற்கு கூட ஒரு பட்டியலா என.  எப்படியாக இருந்தாலும் என்னிடம் இருந்தது எண்பது ரூபாய் தான், அதனால் எக்ஸிஸ்டென்ஷியலிஸ்மே வாங்கினேன். ஏற்கனவே I AM KRISHNA CHA (3) இல் அதன் சிறு அனுபவத்தினை கூறியிருந்தேன். அதன் படி எனக்கு சுத்தமாக நாவல் புரியவில்லை.


ஏன் எனக்கு அந்த நாவல் முதல் வாசிப்பில் புரியவில்லை என இப்போது சிந்தித்து பார்க்கிறேன். சாமான்யன் தன் சிறு வயதிலிருந்து கதை மாந்தர்கள் சம்பவங்கள் அவற்றிற்கிடையில் தென்படும் கோர்வைகள் கடைசியில் அவனை மிரட்டச் செய்யும் ஆச்சர்யங்கள் என கேட்டும் வாசித்தும் இருப்பான். ஆனால் இவரின் நாவல்களில் கதாபாத்திரங்கள் இருக்கும், சம்பவங்கள் இருக்கும், கோர்வை இருக்காது, பக்கத்திற்கும் அடுத்த பக்கத்திற்கும் சம்மந்தம் இருக்காது. இப்படி கதைசொல்லியும் கதை மாந்தர்களும் புடை சூழ்ந்திருக்கும் உலகத்தில் வளர்ந்தவனால் எப்படி இதனை உள்வாங்கிக் கொள்ள முடியும்? இப்போது நான் சொன்ன விஷயமே அந்நாவலில் பகடியாய் வந்ததை கண்டவுடன் நானும் அந்த பாழடைந்த வாசிப்பில் சிக்கிவிட்டேனே என எண்ணினேன்.

கதையில் பகடி எனக் கூறியிருந்தேன். ஆரம்பத்தில் சூர்யா என்பவன் எழுதும் முகவுரை வாசகனுக்கு வருகிறது. அது நன்கு விறுவிறுப்பாக சென்றுகொண்டே அவனுக்கும் அவனை அலைய வைக்கும் ஒருவனுக்கும் நடக்கும் சம்பவங்கள் வருகிறது. இப்படி சீறாக செல்லும் வாசிப்பு ஒரு கடிதத்துடன் அடிபட்டு நிற்கிறது. அது முகவுரை என்பது வாசகனுக்கு மறுபடியும் அப்போது தான் நினைவிற்கு வரும். சரி என வாசகன் நாவலுக்குள் பிரவேசிப்பான்.

அங்கே முதல் பகுதி சாதாரண நாவல்களைப் போல் கதாபாத்திரங்களின் முன்னுரையுடன் அதற்கான கதைகளுடனும் தொடங்கும். நிறைய கதாபாத்திரங்களின் அறிமுகத்தால் வாசகன் புரிந்து கொள்ள கஷ்டப்படுவான் இருந்தும் நாவலின் வேகத்தில் அவன் அதை மறந்து தொடர்ந்து வாசிப்பான். கதை இப்போது ஆரம்பிக்கும் இப்போது ஆரம்பிக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் வாசகனுக்கு அந்நாவலுக்குள் நாவலாக எழுதிக் கொண்டிருக்கும் சூர்யா ஒரு ஆச்சர்யத்தினை அளிப்பான். அது அவன் எழுதும் நாவலில் அறிமுகப்படலம் இருக்கிறதே தவிர மீதியுள்ள பக்கங்கள் எரிந்து விட்டது என. அதனை மாற்ற முடியாது என்னும் பட்சத்தில் வாசகன் அடுத்த பத்திக்கு செல்கிறான். அதில் சூர்யா என்னும் கதாபாத்திரம் தன் வரலாற்றினை ஆரம்பிக்கிறது.

வாசகன் என்னும் கதாபாத்திரத்தின் வழியே என்னையும் நான் கூறிக் கொண்டேன். இதுவரை ஆச்சர்யம் எதுவெனில் கதாபாத்திரங்களின் அறிமுகம் பாதியில் அறுபடுகிறது என சொன்னேன் அல்லவா அதுவரை ஏதோ ஒரு கதை என்னை துரத்தி வந்ததாகவே உணர்ந்தேன். அதனால் அந்த பக்கத்தில் ஒரு வெறுமையே என்னை சூழ்ந்தது. அடுத்து நானும் சூர்யாவினை வாசிக்க ஆரம்பித்தேன். அது முன்னம் கூறிய அதே கதாபாத்திரங்கள் தான் இருந்தும் புது கதையினை வழிநடத்தி செல்வதாக இருந்தது. அதன் நடை சரியான வேகம். நான் படித்த க்ரைம் நாவல்களில் கூட அந்த அளவு வேகம் இல்லை. ஆனால் அதில் கதை தான் இல்லை என்பதை முன்னமே கூறிவிட்டதால் அதன் மூலமாக நான் உணர்ந்ததை கூறுகிறேன்.

இதில் எழுத்தாளனின் வெற்றி என்னவெனில் அறுபட்டு அறுபட்டு பக்கங்கள் கடந்தாலும் அந்த பக்கத்தினில் வாசகனின் இருப்பினை உணரவைக்கிறார். இதை விட பெரிய விஷயம் நாவல் சூர்யாவின் இளமை பிராயத்தினை ஒட்டியே நகர்கிறது. அப்போது அவனுக்குள்ளும் அவனை சுற்றியும் நடக்கும் காமத்தனமான போதனைகள் நம்முள் விவாதத்தினை ஏற்படுத்துகிறது. எப்படியெனில் சூர்யாவின் தோழன் வடிவேலுவின் பழக்கம் அவனை செட்டியாரிடம் சேர்க்கிறது. செட்டியார் மூலமாக உடலைப் பற்றி சிலவற்றை கற்கிறான். கற்கிறான் என்பதை வைத்து தெரிந்து கொள்கிறான். அதனை தெரிந்தும் அந்த பிராயத்தில் தன் தேகத்தினையே தனக்கு ஆராய்ச்சி கூடமாக மாற்றி தன் இன்பத்திற்கு செட்டியாரின் தத்துவங்களை பொய்யாக்குகிறான். இவை மட்டும் தானா எனில் கோயில் குருக்கள் குண்டலினி சக்தி எனக் கூறி சூர்யாவின் தேகத்தினை தனதாக்கிக் கொள்கிறார். இவனோ தனக்கு எது சுகமோ அது மற்றவருக்கும் பயனெனில் அதை செய்கிறான். இப்படி அனைத்தும் அவனுக்குள் ஒரு நிதர்சனமான தத்துவத்தினை தேடியே அமைகிறது.

இறுதியில் கண்டுகொள்கிறானா என்பது வாசகனின் வாசிப்பில் தான் அமைகிறது. இது சற்று முரணாக படலாம். ஏனெனில் நாவலின் போக்கில் சூர்யாவாக மாறப்படுகிறோம். பல கதைகள் கண்களில் கண்ணீரினை வரவழைக்கும் அளவு காத்திரமானவை. அதனை அப்படி அழகியலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் பாத்திரம் பாப்பாத்தியம்மாள். அவளின் வாழ்க்கையும் கதையின் ஓட்டமும் வாசகனை அந்த விளிம்பு நிலைக்கே கொண்டு செல்கிறது.

இந்த நாவல் எனக்கு புது நாகரீகத்தினையே அறிமுகப்படுத்தியதோ என்ற எண்ணமும் சில் காலம் இருந்தது உண்டு. இதனை வாசித்த போது இப்படியெல்லாம் மனிதர்கள் இருந்தார்களா ? மலத்தை அள்ளுவது ஒரு தொழிலா ? என்று நினைத்தேன். சமூகத்தின் கறுப்பு பக்கங்கள் அப்படியே பிரதியாக இருக்கும் நாவல் இது தான். என்னை போன்று சமூகத்தினை பற்றி எதுவுமே தெரியாமல் இந்நாவலினை தொட்டால் இதே அபத்தமான அலைகளை தான் அவனுள் அது எழுப்பும்.

இலக்கியம் சமூகம் பரந்துபட்ட அறிவு முதலியன் முழுதாக அறிந்தால் மட்டுமே எக்ஸிஸ்டென்ஷியலிஸ்மும் பேன்சி பனியனும் என்னும் நாவலினை புரிந்து கொள்ள முடியும் என்பது என் கருத்து. இதுவரை இந்நாவலினை நான்கு முறை வாசித்துவிட்டேன். இன்னும் முழுதாக புரிந்து கொள்ள முடியவில்லை. தாஸ்தாயெவ்ஸ்கியினை சிறிது வாசித்த பின் தான் biggest threat to existentialism is non availability of good quality condomns என்னும் வாக்கியம் பகடி என்பதையே என்னால் உணர முடிந்தது.

பல முடிச்சுகளை தன்னுள் சில விடுகதையான வக்கியங்களால் விடுபட முடியாமல் சாரு வைத்திருக்கிறார். அதனை விடுவிக்க வேண்டிய கடமை வாசகனிடம் விடப்படுகிறது. எப்படி எனத் தெரியாமல் சில பேர் மறுமறுபடியும் பிரதி தரும் இன்பத்தினை கொண்டு மேலும் இன்பத்தினை தேடி வாசிக்கின்றனர். தாங்கள் எப்படி எனத் தெரியவில்லை நான் இந்த வகை தான்.  இன்னும் தலைப்புடனேயே போரிட்டுக் கொண்டிருக்கிறேன்.

Share this:

CONVERSATION