கலகக்காரர் ஜி.நாகராஜன்


இப்பொழுது தான் ஜி.நாகராஜன் எழுதிய நாளை மற்றுமொரு நாளே வாசித்து முடித்தேன். இலக்கியத்தில் அவருடைய காலகட்டத்தில் பெரிய கலகக்காரராக இருந்திருக்கிறார் என்பது இந்நாவலில் அழகாக தெரிகிறது.

இந்நாவல் பல முடிச்சுகளை தன்னுள் கொண்டுள்ளது. திகிலூட்டும் க்ரைம் நாவலா என்றால் இல்லை. கதை என்பது நிச்சயமாக இல்லை. அப்படியெனில் அந்த நாவல் தான் என்ன எனில் கந்தன் என்பவனின் வாழ்க்கையிலிருந்து ஒரு நாள் பிடுங்கப்பட்டு அது நாவலாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறத்தி முடுக்கு பற்றிய எனது எழுத்தில் இவரை முற்போக்கு சிந்தனாவாதியாக குறிப்பிட்டிருந்தேன். இந்நாவலில் அது ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளது. எனக்கு அந்த குறத்தி முடுக்கு நாவலின் எனது பார்வையினையே முழுதாக எழுதவில்லையோ என்று தான் தோன்றுகிறது. அதற்கெல்லாம் செல்வதற்கு முன் இந்நாவலின் களத்தினை கூறுகிறேன். இதிலும் கதை என்பது இல்லை. ஒரு நாளில் கந்தன் என்பவனின் வாழ்க்கையில் சிக்குண்ட நிகழ்வுகள் கொஞ்சமும் மாறாமல் அப்படியே நாவலாக்கப் பட்டுள்ளது. மேலும் இந்நாவல் பல கருக்களை தன்னிடம் கொண்டு நகர்கிறது. உதாரணத்திற்கு காதல், அரசியல், காமம், கோபம் என மனிதனின் அனைத்தும் ஒரு நாளில் கதையின் நாயகனான கந்தனுக்கு நடக்கிறது. இவ்வளவே கதை.

என் வாசித்தலை அதிகம் அறிந்த நண்பர்கள் என்னிடம் ஏன் உனக்கு கதைகளுள்ள நாவல்களை விட கதைகளில்லா நாவல்களே அதிகம் பிடித்திருக்கிறது என. அதற்கான அர்த்தமும் பதிலும் இங்கு நான் கூற விழைகிறேன். இலக்கியங்களில் இரு வகைகள் இருக்கின்றன.
1.நவீனத்துவம்
2.பின்நவீனத்துவம்
இரண்டிற்கும் எளிமையான அர்த்தங்கள் என்னவெனில் முதல் ஜாதி கதைகளை சுமந்து கொண்டு வருவது இரண்டாவது கதைகளை வாசகன் மேல் சுமத்துவது. இரண்டாவதற்குரிய அர்த்தம் தங்களுக்கு தெளிவில்லாமல் இருந்திருக்கலாம். முதல் வகையில் எழுத்தாளன் ஒன்று எழுதுகிறான். அது அவனுக்குரிய பிரதியாகிவிடுகிறது.அதனை வாசகன் வாசிக்கும் போது அந்த எழுத்தாளன் தன் கதாபாத்திரங்களின் வழியே என்ன சொல்ல வருகிறானோ அதனை நம்ப வேண்டிய கட்டாயத்தில் ஒரு மறுக்க முடியாத நிர்பந்தத்தில் மூழ்கிவிடுகிறான். கடைசிவரை எழுத்தாளனின் ஆதிக்கமும் அதிகாரமும் வாசகனுடன் ஒன்றிவிடுகிறது. இப்போது இரண்டாவது வகைக்கு வருவோம். பின் நவீனத்துவத்தில் பிரதிக்குள்ளேயே எழுத்தாளன் இறந்து விடுகிறான். கதை பாதியிலேயே அறுபட்டு விடுகிறது. இந்த வாக்கியம் கூட சரியா என எனக்கு தெரியவில்லை. ஆனால் வாசகனுக்கு கதை அப்படித் தான் படுகிறது. அப்போது அவன் முடிவு இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என யோசிக்க தொடங்குகிறான். ஒவ்வொரு வாசகனுக்கு ஒவ்வொரு மாதிரி தோன்றும். அது அவனின் மனநிலையினை பொறுத்தது. அப்போது, அஃதாவது நாவல் முடியும் போது அவனுக்குள்ளே ஒரு முழுமையான அவனால் உருவாக்கப்பட்ட கதை தோன்றுகிறது. ஆக பின்நவீனத்துவத்தில் வாசகன் பங்கேற்பாளன் ஆகிறான். வாசகன் எழுத்தாளன் ஆகிறான். முக்கியமான விஷயம் இந்த பின்நவீனத்துவத்தில் சொல்ல வரும் கருத்தில் சமாச்சாரத்தில் பகடி என்னும் விஷயம் அதீதமாக இருக்க வேண்டும்.

Non-linear என்னும் வகையினை இங்கே கூற வேண்டும். இது வாசகனுக்கு சவாலான ஒன்று. காரணம் முழு நாவலும் நேரே இல்லாமல் கலைத்துப் போடப்பட்டு வாசகனிடம் தரப்படுகிறது. வாசகன் தன் வாசிப்பின் மூலம் அதனை மறு உருவாக்கம் செய்கிறான். அப்படி அதில் அவன் பங்கேற்கும் போது அங்கே பின்நவீனத்துவத்தின் சாயலும் படர்ந்துவிடுகிறது. இதற்கும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அது என்னவெனில் அப்படி கலைத்து போடப்படும் எழுத்துகள் ஒரு மையத்தினை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். இது போன்ற கதைகள் தான் எனக்கு ஈர்ப்பினை அதிகம் ஏற்படுத்துகிறது.

இப்போது நாளை மற்றுமொரு நாளே நாவலுக்கு செல்வோம். இது முழுக்க முழுக்க பின்நவீனத்துவ நாவல். எப்படியெனில் ஒரே நாளில் அனைத்து விஷயங்களும் முழுமையடைவதில்லை. வாசகன் சாதாரண கதை வாசிப்பில் இதனையும் வாசிக்க சில சில நிகழ்வுகளின் முடிவுகளை எதிர்பார்க்கிறான். ஆனால் பிரதியிலிருந்தோ அவை மறைக்கப்பட்டுவிடுகிறது.

Trap என சொல்லப்படும் பொறி வைக்கும் திறமை ஒவ்வொரு எழுத்தாளனின் கையினில் இருக்கிறது. அதன்மூலம் என்ன செய்ய முடியும் எனில் வாசகனின் நம்பகத் தன்மையினை சம்பாதிக்க முடியும். அதன்படி இதிலிருக்கும் பொறி என்னவெனில் இது ஒரே நாளில் நடக்கப்படும் கதை என்பதே. அதனை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். ஒவ்வொரு கதாபாத்திரத்தினையும் வாசகனுக்கு அறிமுகம் செய்வதில் கதை பல நாட்கள் பின்னுக்கு செல்லப்படுகிறது. அங்கே ஒவ்வொரு கதைகள் நாவல் முழுக்க உருவாகிக் கொண்டே இருக்கிறது.

இனி நாகராஜனின் கலகத்தன்மையினையே கூற வேண்டும். இனிக் கூறப்போவது குறிப்புகளாகத் தான் இருக்கும். மேலும் இவை நாவலில் ரசித்தவையே.

* போலி டாக்டரின் நடமாடல்கள் இக்காலத்தில் அதீதமாக இருக்கிறது என்பது நாம் அறிந்ததே. அதே இந்நாவல் உருவாக்கப்பட்ட காலத்திலும்(1974) அவை நிறைந்திருக்கிறது. அதன் வெளிப்பாட்டினை ஒரு பகுதியில் பகடியாக கூறுகிறார். ஜீவா என்ற ஒரு பெண். அவளுக்கு பேச வராது. அதற்கு கடந்தகாலமாக கந்தன் கூறும் விஷயம் அவளுக்கு உடம்பு சரியில்லாத போது
“ஹோமியோபதி சர்டிஃபிகேட்டோடு அல்லோபதி வைத்தியம் செய்யும் டாக்டர் வந்து ஊசி போட்டார்.”

* அவனுடைய மனைவி பெயர் மீனா. அவளை காசு கொடுத்து சோலை என்பவனிடமிருந்து வாங்கி வந்தான். இந்த கதை நடக்கும் நாளில் அவன் காலையில் தன் தலை முடியினை கத்தரித்து, சவரம் செய்து வீட்டிற்கு வருகிறான். அப்போது அவன் மனைவி தரையினை பெருக்கிக் கொண்டிருக்கிறாள். இதற்கு முன் முடி திருத்தும் இடத்தில் அச்சிறுவனின் கை அவனுடைய தேகத்தினை(தலையினைத் தவிர) விட்டு விட்டு தீண்டும் போது அவன் காம உணர்வினை அடைகிறான். இப்போது வீட்டில் கூட்டிக் கொண்டிருந்த மனைவியை அப்படியே கட்டிபிடித்து புணர்கிறான். காலையிலேயே எதற்கு என்றெல்லாம் அவள் சொல்கிறாள். அதற்கு முன் நடக்கும் சம்பாஷனைகளும் இந்த புணர்ச்சியும் முரணாகவே வாசகனுக்கு வலம் வரும். ஆனால் அதன் மூலம் கந்தன் தன் இச்சைக்காக வாழ்பவன் அதற்காக மட்டுமே வாழ்பவன் என்றும் வாசகன் உணர்ந்து கொள்கிறான். எனக்கு இந்த பகுதியில் ஈர்த்தது என்னவெனில் அந்த புணர்ச்சிக்கு பின் அவள் அழ ஆரம்பிக்கிறாள் ஏன் எனில் நான்கு வருடத்திற்கு முன் இறந்த சந்திரனை இழந்துவிட்டோமே என. ஒரே பத்தியில் இன்பவியல் புணர்ச்சியை ஒரு சடங்காக, துன்பவியல் நாடகமாக மாற்றிவிட்டார். அவனோ சிறிதும் சட்டை செய்யாமல் தன் அடுத்த வேலையான குளியலுக்கு செல்கிறான். வாசகன் அடுத்த பத்திக்கு செல்கிறான்.

* கந்தனின் ஒரு குழந்தை கீதா தன் கையினில் பலூன் ஒன்றினை வைத்திருக்கிறாள். அதனை தன் கையிலுள்ள சிகரெட்டினை வைத்து வெடித்து விடுகிறான். அப்போது தான் அதனை வாங்கித் தருவதாக சொல்கிறான். ஆனால் அது நடக்கவில்லை. அதனை நினைத்து நினைத்து ஜுரம் வந்து கடைசியில் குழந்தை இறந்தே விடுகிறது. அப்போது அவனிடம் ‘குழந்தைகள் ஒன்றை ஆசையாக வச்சிருக்கும் போது அத நாசப்படுத்தக் கூடாது’ என்கிறான். இவனோ சற்றும் யோசிக்காமல் ‘அப்படியும் இருக்குமோ?’ என்கிறான்.

* இது கதையில் கடந்த காலத்தில் சொல்லப்படுவதாக வருகிறது. அதில் ஐரின் என்னும் பாத்திரம் ஒப்பந்தத்தினை வைத்து செட்டியாரிடம் மிரட்டுகிறது. அதில் ஒரு நிபந்தனையினை செட்டியார் கூற அதனை கந்தன் வாசிக்க சொல்கிறான். இங்கு எதற்கு கந்தன் எனில் அவன் தான் இந்த பிரச்சினையில் மத்தியஸ்தன். அவளோ தனக்கு கூச்சமாக இருக்கிறது என்கிறாள். அதில் ஒப்பந்தத்தத்தின் படி ஒப்பந்தம் முடியும் வரை ஐரினுக்கு வேறு காதலர்கள் இருக்கக் கூடாது என்பதே. செட்டியாருக்கோ சந்தேகம் வருகிறது. இதனை தெரிந்தவுடன் அவள் கோவத்தில் என் நாடாக இருந்தால் இந்நேரம் என் ஷூவினை எடுத்து அடித்திருப்பேன் இங்கோ சம்பிரதாயம் வேறுமாதிரி இருக்கிறது என்கிறாள். ஜி.நாகராஜன் காலத்திலும் மேற்கத்திய ஆசை இருந்திருக்கிறது. எனது சந்தேகமெல்லாம் அவர் அந்த ஐரின் என்னும் பெண்ணின் மூலம் சமூகத்தினை சாடுகிறாரா அல்லது தன்னையே பிரதிநிதித்துவம் செய்கிறாரா என்பதே ? பகடியோ அருமை.

* “தம்பி, ஏமாத்துறவங்களும் ஏமார்றவங்களும் இருக்கறது தான் உலகத்தின் தன்மை. அது அழகூன்ட்டுகூட எனக்கு படுது. எல்லாரும் நேர்மையா நடந்துகிட்டா, வாழ்க்கைல போட்டியோ முன்னேற்றமோ இருக்காது. . . . . .சூழ்ச்சி செய்யும் போது தான் உசிரோட இருப்பதாகவே தெரியுது. . . சூழ்ச்சி செய்ற திறமை தான் மனுஷன மனுஷனாக்குது. அது தான் மனுஷனுக்கும் மிருகத்துக்கும் இருக்குற வித்தியாசம்” - கந்தனின் வீட்டினை சோலை ஏமாற்றியவுடன் அந்தோணி என்பவனிடம் செல்கிறான். அங்கு அவன் தரும் போதனைகள்.

* முதலாளித்துவம் தழைத்தோங்கியிருந்த காலம் என நினைக்கிறேன். அதனை எதிர்ப்பதாக சோஷலிஸ்டுகள் கிளம்பியிருந்தனர். இதனை இந்நாவலில் அதிகமாக நாகராஜன் கூறியுள்ளார். கந்தன் போகும் வழியில் ஒரு மாநாட்டை பார்க்கிறான். அப்போது தான் இந்த சோஷலிஸ்டு பேச்சுகள். ஒருவனுக்கு போதுவான முறையில் அத்தத்துவத்தினை பற்றிய இக்குறிப்புகள் இதில் அடங்கியுள்ளது.

இப்போது என் வார்த்தைகளுக்கு வருகிறேன். மேற்கூறிய அனைத்து விஷயங்களும் பார்ப்பதற்கு சாதரணமாகத் தோன்றலாம். ஆனால் அவை எழுதப்பட்ட காலமே கலகத் தன்மையினை கொண்டுள்ளது. கடைசியாக சோஷலிஸ்டுகளை பற்றி கூறியிருந்தேன். அதில் நிறைய பகடிகள் நாவலில் இருக்கிறது. குழந்தையின் பலூனில் அவன் அந்த பெரிய பத்திகளுக்கு பின் சொல்லும் அந்த வார்த்தையானது எவ்வளவு உக்கிரமும் வதையும் தன்னுள் கொண்டுள்ளது என்பதை அதன் முந்தைய வார்த்தைகளை வாசித்தால் தான் உணர்ந்து கொள்ள முடியும். இந்நாவலில் எனக்கு ஆகச் சிறந்ததாக நான் கருதுவது transition. ஆமாம் பிரதிக்குள் பிரதியாக நாவலில் நிறைய கதைகள் வந்த போதிலும் அதற்கும் நடப்பில் சென்று கொண்டிருக்கும் கதைக்கும் இடையே தூரம் இல்லாததை போலவே நமக்கு ஆசிரியர் காட்டியிருக்கிறார். கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் வித்தியாசமின்றி நாவல் செல்லும். நாவலின் பல பக்கங்கள் வாசகனுக்கு அதுக்கடுத்து என்ன நடக்கும் என்னும் எதிர்பார்ப்பினை அளிக்கிறது. ஆனால் அதற்கான விடை சம்பவம் நடக்கும் நாளிற்கு அடுத்த நாளில் இருக்கிறது. அடுத்த நாளிற்காக காத்திருக்கும் வாசகனுக்கு ஜி.நாகராஜன் விட்டு செல்லும் வார்த்தை - நாளை மற்றுமொரு நாளே. . .

ஒட்டு மொத்தத்தில் நாவல் இலக்கியத்திற்கு ஒரு பொக்கிஷம். அதே முதல் நிலை வாசகர்களுக்கு இது போன்ற நாவல்கள் பிடிக்குமா என்பது கேள்விக் குறியே!!!

குறத்தி முடுக்கில் இருந்த ஜி.நாகராஜனின் அழகியல் இதில் குறைகிறது. அந்த வகையில் எனக்கு இந்நாவலில் சின்ன வருத்தமே.

பின் குறிப்பு : இந்த புத்தகத்தினை கோவை புத்தகத் திருவிழாவில் வாங்கினேன். அப்போது எனக்கு இதனை மட்டும் தான் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். அப்போது அங்கு யதேச்சையாக வந்த மனிதர் என் தோளினை தட்டி குறத்தி முடுக்கு நாவலினை காண்பித்து அருமையான நாவல் என்றார். சரியென வாங்கினேன். இப்போது குறத்தி முடுக்கு எனக்குள் நீங்காத இடத்தினை பிடித்து விட்டது. நாளை மற்றுமொரு நாளே என்னும் நாவல் அந்த காலகட்டத்திலேயே தங்கிவிட்டதோ என்னும் அசூயை தான் எனக்குள் இருக்கிறது.

Share this:

CONVERSATION