பொன்னியின் செல்வன் (3)

. . .தமிழகத்தில் மாபெரும் இடத்தினை வளைத்துப்போட்டு மாபெரும் சாம்ராஜ்யத்தினையே நடத்திவந்தவர் சுந்தரச் சோழன். அவருக்கு மூன்று பிள்ளைகள் ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன். சுந்தரச் சோழனுக்கு காலில் பலமாக அடிபட்டு அதனால் பக்கவாத நோயும் ஏற்பட்டதால் தஞ்சை கோட்டையிலேயே இருக்கிறார். ஆதித்த கரிகாலர் காஞ்சியில் தன் தந்தைக்காக கட்டிய தங்க மாளிகையில் தந்தை வராமல் காலம் தாழ்த்துவதால் தஞ்சைக்கு தான் வரமாட்டேன் என முடிவு செய்து வாழ்பவன். அவரின் அந்தரங்க ஒற்றன் தான் கதையின் மற்றொரு நாயகனான வல்லவரையன் வந்தியத்தேவன். அவன் சுந்தரச் சோழருக்கு செய்தி சொல்ல தஞ்சைக்கு வருகிறான். அப்போது தான் மக்களின் அரசல் புரசல் வார்த்தைகளிலிருந்து தெரிந்து கொள்கிறான் அஃதாவது தனாதிகாரியாக தஞ்சையில் இருக்கும் பழுவேட்டையர்கள் தான் இப்போது அரசாளுவதாகவும் சுந்தர சோழரை தஞ்சை அரண்மணையிலேயே சிறை வைத்துள்ளனர் என்றும்.

வந்தியத்தேவன் வரும் வழியிலேயே நடக்கும் தந்திர சபையினை ஒட்டு கேட்டு விடுகிறான். அதன் மூலம் அவன் தெரிந்து கொள்வது பழுவேட்டையர்கள் சுந்தர சோழருக்கு பின் அரசாளும் பதவியினை மதுராந்தகனுக்கு கட்டலாம் என முடிவு செய்கின்றனர். அது ஒரு வகையில் நியாயமான முறையே. ஏனெனில் மதுராந்தகனின் தந்தை தான் சுந்தர சோழருக்கு பதவியினை கொடுத்து இனி உன் தலைமுறையே ஆளட்டும் என்றும் கூறிவிட்டார். அதன் படி ஆதித்த கரிகாலனுக்கோ அருள்மொழிவர்மனுக்கோ தான் பதவி செல்ல வேண்டும். இருவரும் மதுராந்தகனை விட வயதும் சிறியவர்கள் அதனால் எப்படியும் இவனை அரசனாக்கிவிடலாம் என முடிவு கட்டினர்.இத்தனைக்கும் சிவனடியாராக போக வேண்டியவனை மூளைச் சலவை செய்து அரசாளும் ஆசையினை தூண்டி விட்டனர். இதனால் இப்போது அவன் கேட்ட மக்களின் வார்த்தைகளும் ஊர்ஜிதம் ஆனது. அதன் பின் பல சுரங்க வழிகளில் பலரின் பகைமையினை சம்பாதித்துக் கொண்டு தஞ்சை அரண்மைணைக்குள் நுழைகிறான். அதுவும் பனை இலச்சினை உள்ள மோதிரத்தினை காட்டி அதும் பெரிய பழுவேட்டையர் கொடுத்தது என நுழைகிறான். உண்மையில் கொடுத்தது பெரிய பழுவேட்டையரின் இளைய மனைவியான நந்தினி. சின்ன பழுவேட்டையருக்கோ சந்தேகமே இருந்தது. பின் சுந்தர சோழரிடம் அபாயம் என சொல்கிறான். அது என்ன என சொல்ல அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் எப்படியோ குந்தவையினை பார்க்கிறான். குந்தவையிடம் ஆதித்த கரிகாலர் கொடுத்த ஓலையினையும் கொடுத்து விட்டு தன் வேலை முடிந்தது என நினைக்கும் போது தான் அதில் கரிகாலர் எழுதியிருந்த விஷயம் அவனுக்கு தெரிய வந்தது. அஃதாவது அதில் இவன் நம்பிக்கையானவன் இவனை நம்பி எந்த பொறுப்பினையும் ஒப்படைக்கலாம் என. அப்போது குந்தவை ஈழத்தில் மகிந்தனோடு போர் புரிந்து கொண்டிருக்கும் தன் தம்பி அருள்மொழிவர்மனை தன்னிடம் அழைத்து வரும்படி வேலையினை ஒப்படைக்கிறாள். வந்தியத்தேவன் ஈழத்திற்கு புறப்படுகிறான்.

தஞ்சையில் இப்படி நடக்கையில் காஞ்சியில் ஆதித்த கரிகாலருக்கு விஷயம் எப்படியோ சென்றுவிடுகிறது. அஃதாவது மதுராந்தகனுக்கு பட்டம் சூட்டுவதை பற்றி. தன்னையும் அருள்மொழியினையும் பிரிக்க தான் சதித் திட்டம் தீட்டுகிறார்கள் என தன் நண்பனான பார்த்திபேந்திரன் என்னும் பல்லவனை ஈழத்திற்கு அனுப்பி அருள்மொழியினை காஞ்சிக்கு அழைத்து வரும்படி ஆணையிடுகிறான். அவனும் ஈழத்திற்கு கிளம்புகிறான். 
(குறிப்பு - இதில் முக்கியமான சில கதாபாத்திரங்களை சொல்லாமல் வருகிறேன். அதனை கதையின் முடிவில் பார்ப்போம்)

ஈழத்தில் போர் புரிந்து கொண்டிருக்கும் அருள்மொழிவர்மன் தான் பொன்னியின் செல்வன். அவனுக்கு அப்பெயர் எப்படி வந்தது எனில் ஒருமுறை காவிரி ஆற்றில் தவறி விழுந்துவிடுகிறான். அப்போது மந்தாகினி என்னும் ஈழத்தாய் அவனை காப்பாற்றுகிறாள். அவனை அந்த பொன்னி நதி காப்பாற்றியதால் பொன்னியின் செல்வன் எனப் பெயர் கொண்டான். அவன் இலங்கையில் மகிந்தன் என்னும் அரசனை எதிர்த்து போர் புரிந்து கொண்டிருந்தான். போர் மழைக்காலம் என்பதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அது மட்டும் அல்ல மகிந்தனும் ஒளிந்து கொண்டிருந்தான். வந்தியத்தேவனுடன் கதையின் ஆரம்பத்திலிருந்து ஆழ்வார்க்கடியான் என்னும் கதாப்பாத்திரம் தொடர்ந்து கொண்டே வரும். அந்த பாத்திரத்தினை பற்றி கூற வேண்டுமெனில் மிகவும் சாமர்த்தியமான பாத்திரம் என்றே கூற வேண்டும். அதீதமாக தந்திரங்களை உபயோகித்தே காரியத்தினை முடிக்கும் தன்மை கொண்டவன். அவனும் வந்தியத்தேவனும் ஈழத்தில் பொன்னியின் செல்வனை சந்திக்கின்றனர். மேலும் அவன் புத்த பிக்ஷுக்களால் கொடுக்கப்படும் அரசினையும் நிராகரிக்கிறான். 

இப்போது புது கதாபாத்திரத்தினை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அவள் பெயர் பூங்குழலி. இவள் கதையில் மிகவும் துடிப்பான பெண். படகோட்டும் வேலை தான் இவளுக்கு. வந்தியத்தேவனையும் இவள் தான் ஈழத்தில் கொண்டு விட்டவள். இப்போது எதற்காக இதனை கூறுகிறேன் எனில் இந்த இருவரும் பொன்னியின் செல்வனுடன் இருக்கும் போது அவள் ஒரு செய்தியுடன் வருகிறாள். அச்செய்தியானது பொன்னியின் செல்வனை சிறை பிடிக்க ஆட்கள் வந்திருப்பதாகவும் அந்த ஆணை சுந்தர சோழரே பிறப்பித்ததாகவும் கூறினாள். இதனை கேட்டவுடன் தந்தைக்கு மரியாதை தர வேண்டும் என சரணாகதி அடைய செல்கிறான். ஆனால் இவனை பிடிக்க வந்த வீரர்கள் அரபு நாட்டு வீரர்களால் அடிபட்டு கிடந்தனர். அந்த அரபு நாட்டு கப்பல்களில் வந்தியத்தேவன் சிக்கியிருந்தான். இதனை தெரிந்தவுடன் தன் நண்பனை காப்பாற்ற பார்த்திபேந்திரன் கப்பலில் செல்கிறான். வெள்ளத்தில் மிதந்த நடுக்கடலில் மின்னலினால் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கப்பலில் இருந்து வந்தியத்தேவனை காப்பாற்ற குதிக்கிறான். மீண்டும் பொன்னியின் செல்வனை காணவில்லை என்றவுடன் பொன்னியின் செல்வன் இறந்துவிட்டான் என்னும் செய்தி தஞ்சையில் பரவுகிறது. சுந்தர சோழரோ தன் மகனை காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டே இப்படி ஒரு முறையினை கையாண்டார். பூங்குழலியும் வந்தியத்தேவனும் பொன்னியின் செல்வரை காப்பாற்றி நாகையில் இருந்த புத்த விஹாரத்தில் தங்க வைக்கின்றனர்.

இப்போது நந்தினி பெரிய பழுவேட்டையரினை தன் அழகினால் ஆட்டி வைக்கிறாள். அதன் பெயரில் ஒரு சபை கூடுகிறது. அதில் அனைத்து சிற்றரசர்களும் ஆதித்த கரிகாலரும் கலந்து கொள்ள இருந்தனர். எதற்கு இந்த சபை எனில் அடுத்த பதவிக்கு யாரை தேர்வு செய்வது என முடிவு செய்வதே. ஆனால் அதற்குள் இருக்கும் தந்திரம் என்னவெனில் ஆதித்த கரிகாலன் போரில் வீரபாண்டியனின் படைகளை உடைத்து எறிந்திருக்கிறான். ஆனால் வீரபாண்டியனோ ஓடி எங்கோ ஒளிந்துவிட்டான். அப்போது நந்தினியின் அழகில் கரிகாலரும் மையல் கொண்டிருந்தார். பின் ஒரு கோயிலில் சென்று பார்த்தால் அதாவது நந்தினியின் வீட்டில் வீரபாண்டியனை பார்த்திருக்கிறான். நந்தினி எவ்வளவு கெஞ்சியும் மனம் சளைக்காமல் வீரபாண்டியனின் தலையினை கொய்து எடுத்தான். அதற்கு பழி தீர்க்கவே நந்தினி இச்சபையினை கூட்டியிருக்கிறாள். அதன்படியே கரிகாலனை தனியே அழைத்திருக்கிறாள்.

தஞ்சையில் ஆரம்பத்தில் வந்தியத்தேவன் புகுந்தபோது தற்செயலாக முதுகில் கத்தி குத்தப்பட்ட தன் நண்பன் கந்தமாறனை காப்பாற்றினான். அவனோ இவன் தான் தன் முதுகில் குத்தியிருக்கிறான் என ஊர் முழுக்க பரப்பிவிட்ட்டான். அந்த அழைப்பு நடக்கப்பட்ட இடத்தில் நந்தினி, கந்தமாறன், ஒற்றனாக வேலை செய்ய வந்த வந்தியத்தேவன், கந்தமாறனின் தங்கை மணிமேகலை, திடிரெனத் தோன்றிய ஒரு காளாமுகன். அந்த இடத்தில் கரிகாலனின் துர்மரணம் நிகழ்கிறது. வீரர்கள் அங்கு என்ன நடந்தது எனப் பார்க்க வரும் போது அருகில் வந்தியத்தேவன் இருந்ததால் அவன் தான் கொன்றான் என குற்றம் சுமத்துகின்றனர்.  மேலும் சுந்தர சோழனை மறைமுகமாக கொல்ல வந்த வேலினை ஊமை மற்றும் செவிட்டு ஈழத்தாயான மந்தாகினி வாங்கிக் கொள்கிறாள். இப்போது என் கதை சொல்லலை இங்கு சில கேள்விகளுடன் முடிக்கலாம் என நினைக்கிறேன்.

நந்தினி தன் பழியினை தீர்ப்பதற்காக கரிகாலனை கொல்ல திட்டம் தீட்டுகிறாள். ஆனால் அதில் எதற்கு மதுராந்தகனை பட்டத்தில் ஏற்றப் பார்க்கிறாள் ?
அந்த ஐவரில் உண்மையாக ஆதித்த கரிகாலனை கொன்றது யார் ?
காளாமுகனாக வந்தது யார்?
மந்தாகினி யார் ?
பொன்னி நதியில் வீழ்ந்த அருள்மொழி வர்மனை மந்தாகினி ஏன் காப்பாற்ற வேண்டும் ?
சுந்தர சோழனை மந்தாகினி எதற்காக காப்பாற்ற வேண்டும் ?
சுந்தர சோழனுக்கு பிறகு ராஜ்ஜியம் யாருக்கு சென்றது ? (குறிப்பு - பொன்னியின் செல்வனுக்கு செல்லவில்லை)

இத்தனை கேள்விகளுக்கு விடை தெரிந்தால் 1500 பக்கமுள்ள பொன்னியின் செல்வன் நாவல் முடிகிறது. இதனையும் நானே கூறலாம். ஆனால் அந்நாவலின் பிரதி தரும் இன்பத்தினை யாராலும் உணர முடியாது. ஆயிரத்தி ஐநூறு என்பது ஆரம்பத்தில் சற்று பெரிதாகவே இருந்தது. ஆனால் வாசிப்பு பல முடிச்சுகள் தந்திரங்கள் என தன் வேகத்திற்கு இழுத்துச் சென்று முடித்தது.

இக்கதையில் எனக்கு ஆகப் பிடித்த கதாபாத்திரங்கள் மூன்று - ஆழ்வார்க்கடியான், பூங்குழலி மற்றும் நந்தினி. அதற்கு காரணம் அவர்களின் தந்திர புத்தி. நந்தினி கிட்டதட்ட வில்லி என்னும் விதத்திலேயே சித்தரிக்கப் படுகிறாள். ஆனால் அவளின் தந்திரங்கள் ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அதே போல் தான் ஆழ்வார்க்கடியானும். எந்த பக்கத்தில் எந்த வேஷத்தில் வருகிறான் அவன் நல்லவனா கெட்டவனா என கதை முடியும் வரை என்னால் யூகிக்கவே முடியவில்லை. பூங்குழலியின் பக்கங்களின் வேகம் ஈடு இணையற்றவை. ஆனால் அவள் எதற்காக செய்கிறாள் என்னும் கேள்விக் குறி கடைசிவரை நம்மை தொடர்கிறது. இவளும் கெட்டவளோ என்றும் வாசகனை தோன்றச் செய்கிறது. அனைத்து முடிச்சுகளும் முடியும் போது நம்மிடம் மிஞ்சுவது பிரமிப்பு மட்டுமே. அதன் தாக்கமும் அவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு அகலாது.

காஞ்சி, தஞ்சை, பழையாறை, திருஆரூர், நாகப்பட்டினம், ஈழம் என அனைத்து இடங்களிலும் கல்கியின் வர்ணனைகள் அப்படியே நம்மை அக்காலகட்டத்திற்கு எடுத்து செல்கிறது.

முன்னம் பார்த்திபன் கனவிற்கு என் ஆசிரியை சொன்ன விஷயத்திற்கு செல்வோம். ஏன் கல்கியின் வரலாற்று நாவல்களிலேயே பார்த்திபன் கனவு கொஞ்சம் சோடை எனில் அதற்கு காரணமாக நான் யோசித்தது சிவகாமியின் சபதம் மற்றும் பொன்னியின் செல்வனில் ஒவ்வொரு கதைமாந்தர்களுக்கும் தனித்தனி திருப்பங்களும் முடிச்சுகளும் இருக்கும். அது ஒரு இடத்தில் இணைந்து கதையினை முடிக்கிறது. ஆனால் பார்த்திபன் கனவு நாவலில் ஒரே முடிச்சியில் அனைத்து கதாபாத்திரங்களும் சிக்கிக்கொள்கின்றன. வாசித்து பாருங்கள் நான் சொல்ல வரும் விஷயம் நன்கு புலப்படும்.

இங்கு பொன்னியின் செல்வன் என்னுள் ஏற்பட்ட தாக்கத்தினை பதிவு செய்து முடிக்கிறேன். முடிந்தால் மூன்று நாவல்களையும்  வாசித்து பாருங்கள் அருமையான நடை.

கல்கியின் கொடைக்கு நன்றி.

Share this:

CONVERSATION