முதல். . .

சென்ற கட்டுரையில் எனக்கு சாருவின் எக்சிஸ்டென்ஷியலிஸ்மும் பேன்ஸி பனியனும் என்னும் நாவலிடையே ஏற்பட்ட முரணினை பற்றி கூறியிருந்தேன். ஆனால் அதற்குள் செல்வதற்கு முன் சில சுவாரஸ்யமான விஷயங்களை கூறலாம் என்றிருக்கிறேன்.

கட்டுரைத் தொகுப்புகளை அதிகம் வாசித்துக் கொண்டிருக்கும் காலங்களில் பக்கம் பக்கமாக கடிதம் எழுதுவேன். அதற்கு ஒரு வகையில் சுஜாதா காரணமாக இருந்தார். ஏனெனில் கணையாழியின் கடைசி பக்கங்கள் என்னும் புத்தகத்தில் எழுத்தாளன் ஆவதற்கு முதல் படி ஆசிரியருக்கு கடிதம் எழுதுவது என குறிப்பிட்டிருந்தார். அந்த குருட்டு நம்பிக்கையில் என் அசட்டு தனமான கடிதங்களை படிக்கும் சோதனை சாருவிற்கு வந்தது! அவர் தன் அபுனைவுகளில் அதிகமாக தன் நாவலினை பற்றி மட்டும் கூறவில்லை. அவர் எழுதியிருந்த கோணல் பக்கங்கள் என்னும் கட்டுரைத்தொகுப்பினை பற்றியும் கூறியிருந்தார். அதிலும் மற்ற கட்டுரைத் தொகுப்புகளில் அவை விரவி கிடக்கிறதென்றும் கூறியிருந்தார். எனக்கோ சந்தேகம் ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகம் மறுபடியும் ஏன் வெவ்வேறு பெயர்களில் வெளிவர வேண்டும்? ஒருக்கணம் அவரின் சரக்கு தீர்ந்து விட்டதா என்று யோசித்தேன். ஆனால் பிரச்சினை அதுவல்ல. அந்த குறிப்பிட்ட கோணல் பக்கங்கள் விகடனில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தது. என்ன காரணமோ தெரியவில்லை அத்தொடர் திடிரென நின்று போனது. அப்போது அந்த அனைத்து கட்டுரைகளையும் தொகுப்பாக போடலாம் என முடிவு செய்து அவரே பதிப்பித்து வெளியிட்டார். பிறகு உயிர்மையில் பதிப்பிட வாய்ப்பு கிடைத்ததும் அதனை அதன் கருத்துகளுக்கு ஏற்றாற்போல பிரித்து வெளியிட்டார்.

இந்த அனைத்து வரலாறும் எனக்கு பிற்பாடு தெரிந்ததே! இதனால் ஏற்பட்ட பிரச்சினை என்னவெனில் எனக்கு கோணல் பக்கங்கள் தேவைப்பட்டது. கடைக்கு சென்று கேட்டால் மறுபடியும் அதே கேள்வி பதிப்பகத்தின் பெயர் என்ன? அப்போது எனக்கு தெரிந்த ஒரே பதிப்பக்கத்தின் பெயர் உயிர்மை என்பதால் அதனையே கூறினேன்.அவர்களோ ஒவ்வொரு முறையும் நான் வரும் போது தேடி பார்த்து தேடி பார்த்து இல்லை என்றனர். அதிகம் கடிதம் எழுதும் பழக்கம் தொற்றிக் கொண்டதால் அதிலேயே பின் குறிப்பாக கோணல் பக்கங்கள் புத்தகத்தின் பதிப்பக பெயர் என்ன? எங்கு கிடைக்கும்? என்ன விலை? என நச்சரித்து கொண்டிருந்தேன். இத்தனைக்கும் கேனைத்தனமான் விஷயம் எதுவெனில் இவ்வனைத்தினையும் அந்த எழுத்தாளனிடமே கேட்டது தான். என்ன செய்ய! இது தமிழ் நாடு ஆயிற்றே. ஐரோப்பாவில் கொடுக்கப்படும் மதிப்பு இங்கு கொடுக்கப்பட்டால் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவார்கள். இங்கு அவர்களுக்கு என்றும் சிறைவாசம் தான். சரி அதை விடுங்கள் நம் விஷயத்திற்கு வருவோம் அவருக்கு இருக்கும் அத்தனை வேலைகளுக்கு இடையில் பயணங்களுக்கு இடையில் இப்படி கேள்விகள் கேட்டிருக்கிறேன். அவரிடமிருந்து எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனை எதிர்ப்பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான் இருந்தும் மனம் எதிர்பார்த்தது. இன்னும் சரியாக சொல்லப்போனால் கிட்டத்தட்ட பத்து கடிதங்களில் அதனை குறிப்பிட்டிருப்பேன்.

அப்போது ஒரு நாள் என் நண்பர்களுடன் பூமரேங் என்னும் ஐஸ்க்ரீம் பார்லருக்கு(தமிழ் வார்த்தை தெரியவில்லை!) சென்றிருந்தேன். மதியத்திலிருந்து மாலை வரை அந்த சந்திப்பு தொடர்ந்தது. பின் நான்கரை மணியளவில் நான் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பேருந்திலிருந்து இறங்கி நான்கு வழிச்சாலையினை கடந்து தான் என் வீட்டிற்கு செல்ல முடியும். அப்படி நடந்து கொண்டிருக்கும் போது எனக்கு அழைப்பு ஒன்று வந்தது. அது ஏதோ புதிய எண். சாலையினை கடந்த பின் அதனை எடுத்தால் ஒரு கட்டையான குரல். அது போன்ற கட்டைத் தன்மையினை கொண்ட குரலினை அது வரை கேட்டதில்லை. ஹலோ என்றவுடன் என் பெயரினை சொல்லி இருக்கிறாரா என அக்குரல் விசாரித்தது. நான் தான் என்றவுடன் “நான் சாரு நிவேதிதா பேசறேன்” என்றார். எனக்கு அடக்க முடியாத சந்தோஷம் அதனை யாரிடமாவது கூற வேண்டும் ஆனால் அழைப்பினையும் துண்டிக்கக் கூடாது என சுற்றி முற்றி பார்த்தேன். ஒரு பஞ்சாலை தான் என் முன் இருந்தது. அடக்க முடியாத சந்தோஷத்தில் அங்கிருந்து என் வீடுவரை, ஒரு இரு நூறு அடி இருக்கும் அந்த இடத்தினை அப்படியே ஓடியே கடந்தேன். அப்போது லேசாக மழை தூரிக் கொண்டிருந்தது. அவர் ஏதேதோ பேசினார் அந்த வார்த்தைகள் என் காதில் இன்றும் எதிரொலிக்கிறது ஆனால் அந்த ஈரத்தரையில் தெருவில் இருக்கும் அனைவரும் என்னை ஏதோ பைத்தியக்காரனை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தனர். வீட்டினுள் நுழைந்தவுடன் அப்பா அம்மாவிடம் அலைபேசியின் அடிப்பாகத்தினை மூடிக் கொண்டு சாரு நிவேதிதா என வயதுக்கு வந்த பெண் போல் வெட்கப்பட்டுக் கொண்டே வீட்டின் பின் புறம் போய் பேசிக் கொண்டிருந்தேன். அந்த பேச்சில் கோணல் பக்கங்கள் புத்தகத்தினை அவரே எனக்கு தருவதாக கூறினார். அதில் என் சந்தோஷத்தின் நிலை இன்னும் ஏறியது. இதனை என் நண்பர்களிடம் கூறினால் எழுத்தாளருக்கு ஏன் இப்படி குதிக்குற என்கின்றனர் அவர்களிடம் சென்று என் கதா காலேக்‌ஷபத்தினை நடத்தவா முடியும். அப்படி பட்டவர்களிடம் எனக்கு பிடிக்கும் என ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்வேன். இப்போது கோணல் பக்கங்களுக்கு வருகிறேன். கோணல் பக்கங்கள் மொத்தம் மூன்று பாகமாம். அதில் முதல் இரண்டு பாகமும் மற்ற புத்தகங்களில் விரவி இருக்கிறது அதனால் மூன்றாவது பாகத்தினை மட்டும் பாஸ்கர் என்னும் அன்பர் மூலம் அனுப்பி வைக்கிறேன் என்றார். என் குதூகலம் அதிகமாகிக் கொண்டே போனது. அழைப்பு அத்துடனே சாதாரண நலம் விசாரிப்புகள், படிப்பு அது இது என முடிந்தது. ஆனால் அன்று அவருக்கு தெரியாது எனக்கு கோணல் பக்கங்கள் மூன்றாம் பாகம் தருகிறேன் என்னும் இடத்தில் தான் அவரின் ஏழரை அடங்கியிருக்கிறது என.

ஆம் இந்த அழைப்பு வந்த சில நாட்களுக்கு எந்த புத்தகத்தினையும் படிக்காததால் எந்தக் கடிதமும் அவருக்கு எழுதவில்லை. அதன் பிறகு எனக்கு அடித்த குருட்டு அதிர்ஷ்டத்தில் ஏழு புத்தகங்கள் வாசித்தேன். ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒவ்வொரு கடிதம். அந்த ஒவ்வொரு கடிதத்திலும் கோணல் பக்கங்கள் எப்போது கிடைக்கும்? கோணல் பக்கங்களின் விலை என்ன? எப்போது நான் பாஸ்கரினை அழைத்து வாங்கிக் கொள்வது? எப்போது எனக்கு பாஸ்கர் நம்பரினை எனக்கு தருவீர்கள்? என கேள்விகளி பின்குறிப்பாக எழுதினேன். இதை எல்லாம் இப்போது வாசிக்கும் போது நினைக்கிறேன் இவ்வளவு மன உளைச்சலினை நான் கொடுத்திருக்கிறேன் என்று. நன்றாக ஞாபகம் இருக்கிறது அவருடைய இணையதள பதிவில் கூட சிலர் புத்தகம் கேட்டே நச்சரிக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். வினோதமாக இருக்கிறது சாமான்யன் கூறினால் உரைக்கிறது கோவம் வருகிறது, திட்டுகிறோம் வசை மொழிகளால் வருணிக்கிறோம் மேலும் நேர்ல பேச துப்பில்ல என தான் அனைத்தினையும் ஆரம்பிக்கிறோம். அதே இப்படி எழுத்தாளனோ அல்லது உயர் பதவியில் இருப்பவர்களோ கூறினால் ஏன் சிரிக்கிறோம். சிரித்தால் கூட பரவாயில்லை அதே தவறினை மறுபடியும் செய்கிறோம். முதலாமாவது நிறைய பேரிடம் கேட்டிருப்பதால் பொதுப்படையாக கூறுகிறேன். இரண்டாமாவது எனக்கு மற்றவர்களை பற்றி தெரியாது என்பதால் அடியேனே அதற்கு சொந்தக்காரன் ஆகிறேன். இப்படி என் உளவியல் தொல்லைகளை தொடரும் போது எனக்கு அவர் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதில் தான் என் கோணல் பக்கங்கள் எனக்கு தெரிந்தது. பாஸ்கர் என்னும் புதிய நண்பரும் எனக்கு கிடைத்தார். கோணல் பக்கங்களும் கிடைத்தது. அதன் முன்னட்டையில்

அழைப்புக்கே இரு நூறு அடிகள் ஓடியவன் நான் எனில் இதற்கு என் வினையினை யோசித்துப்பாருங்கள். . .

அட எக்ஸிஸ்டென்ஷியலிஸ்த்தினை பற்றி எழுதவே இல்லையே என கேட்கலாம். என்ன செய்ய நடு நிலைமையாக இருந்து சென்ற கட்டுரையில் கூறியதைப் போல நான் எழுதியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் நடந்த விஷயங்கள் இன்னும் பாக்கி இருக்கிறதே.

எனக்கு நாவலே பிடிக்காது எனக் கூறியிருந்தேன். அப்படி இருக்கையில் எப்படி எக்ஸிஸ்டென்ஷியலிஸ்மும் பேன்ஸி பனியனும் நாவலினை வாங்கினேன் ? அதற்கும் முன் சின்ன விஷயம் நடந்தது அது. . . .(அடுத்த பதிவில்)

Share this:

CONVERSATION