அந்தணனும் அக்கார அடிசலும்


நியாயப்படி பார்த்தால் இதற்கு பிராமணனும் அக்காராடிசலும் என்று தான் தலைப்பினை வைத்திருக்க வேண்டும். ரைமிங்காக இருக்கட்டுமே என்று தான் இந்த தலைப்பு. இதனை சாதி ரீதியான கட்டுரை என்று கூட கூறலாம். நான் பிறப்பால் ஒரு பிராமணன் என்பதே இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு தான் அறிந்து கொண்டேன். பெரியப்பாவின் மகனுக்கு கல்யாணம் என தூத்துக்குடிக்கு அருகிலுள்ள செய்துங்கநல்லூர் என்னும் ஊரிற்கு சென்றிருந்தேன். இதற்கு முன் உங்களுக்கு ஒன்றை தெளிவாக்க விரும்புகிறேன். என்னுடைய வளர்ப்பு அலாவுதீனின் வளர்ப்பினை போன்றது. அலாவுதீனை வெளியுலகத்திற்கு காட்டாமலேயே பதினேழு வயது வரை வளர்த்தனர். அதற்கு பிறகு வெளியுலக அனுபவம் வரட்டுமே என வாணிகம் செய்ய அவனின் அப்பா அவனை வெளியே தனியே அனுப்பினார். இந்தக் கதை ஆயிரத்தோரு அராபிய இரவுகள் என்னும் தொகுப்பில் இருக்கிறது. என்னுடன் இந்தக் கதை எப்படி ஒன்றுகிறது எனில் நான் என் சொந்தக்காரர்களை கண்டதேயில்லை. இதனை குறை என்று கூறுவதா நிரை என்று கூறுவதா என்றும் தெரியாமல் முழிக்கிறேன். அந்த தூத்துகுடி பயணத்தின் வரை அம்மாவின் வார்த்தைகளில் மட்டும் தான் சொந்தக்காரர்களை கண்டிருக்கிறேன். என் அப்பாவின் சொந்தமோ டில்லி. பத்து வயதிற்குள்ளேயே ஐந்து முறை சென்று வந்துவிட்டேன். இன்று நினைத்து பார்க்கையில் குதுப் மினாரைத் தவிர எந்த முகமும் என் நினைவில் இல்லை. இப்போதோ நண்பர்களை விட்டு செல்ல மனமில்லை. எனக்கு தெரிந்து சொந்தமெனில் (அம்மா அப்பாவினை தவிர) பெரியம்மாவும் ஒரு வகையில் தூரத்து சித்தியும். அந்த பெரியம்மா மகனிற்கு தான் கல்யாணம். மேலும் இந்த சமூகத்தில் இருக்கும் கூற்று சொந்தக் காரர்களை நம்பாதே அவர்கள் சொத்திற்காக காத்திருப்பவர்கள் என்பதே. அம்மா கூறிய அனைத்து சொந்தக்கதைகளும் இதனை ஒன்றியே இருந்தது. எனக்கோ மனதோரம் ஒரு குறுகுறுப்பு சொந்தக் காரர்களின் முகம் கூடத் தெரியாமல் எப்படி இருப்பது என. இந்தக் குறுகுறுப்பிற்கும் ஒரு பின்புலம் இருக்கிறது. முதல் செமெஸ்டரின் விடுமுறையில் என் தோழி ஒருத்தியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அது மெத்தை வீடு. கீழே பெரியப்பாவின் போர்ஷன் என நினைக்கிறேன். மேலே ஏறும் போது முதல் அடுக்கின் வலது புறத்தில் அத்தை மாமாவின் போர்ஷன், எதிரே பாட்டியுடையது. நானும் அவர்களை அவ்விதமே அழைத்தேன். எனக்கு இந்த ஆண்ட்டி அங்கிள் அன்னியமாக படுகிறது ! இத்தனைக்கும் அவளுடைய வீடு என் வீட்டினில் நாற்பது சதவிகிதம் தான் இருக்கும். ஆனால் எனக்கு அது பிடித்திருந்தது. மனதில் நினைத்து கொண்டேன் என் வீட்டில் நான் இழப்பது இந்த சொந்தமும் அது தரும் குதூகலமும் தான் என்று. அங்கிருந்த இரண்டு நாளினை வாழ்ந்தேன். கிளம்பிய போது தான் என் சொந்தங்களின் ஞாபகம் வந்தது. இந்த கல்யாணத்தின் மூலமாக அனைவரையும் காணலாம் என வர முடிவு செய்தேன். மாமா, பெரியப்பா, சித்தி என அனைத்து நெருங்கிய சொந்தங்களையும் கண்டேன். அவர்கள் அனைவருடனும் என்னால் ஒன்ற முடியவில்லை. எனக்குள் இருக்கும் பெரிய பிரச்சினையே என்னுடைய தனிமை தான். நான் ஒரு மகா தனிமை விரும்பி. அதனை விட்டு வெளிவரலாம் என்றால் அது நிச்சயம் முடியாது. வெகு நாட்களுக்கு யாருடனும் பேசாமல் திடிரென அவர்களுடன் ஒன்றப் பார்த்தால் அது நடக்குமா ? இதே தான் எனக்கும் என் சொந்தங்களுக்கும். மாமா மற்றும் சித்தி பையன்களிடம் கூட ஒன்ற முடியவில்லை. பார்க்க அழகாகவும் hi-fi ஆக இருந்தாலும்  அவர்களின் வாயினில் இருக்கும் பிராமண வழி பாஷை என்னை அவர்களிடமிருந்து அன்னியனாக்குகிறது. நானோ எனக்கு தெரிந்த இரண்டு மூன்று வார்த்தைகளை வைத்து நானும் பிராமணன் என காண்பித்து கொண்டிருந்தேன். என் சக நண்பர்களோ என்னை பிராமணன் என்றே ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். சமூகத்தால் வரையறுக்கப்பட்ட பிராமணர்கள் தயிர் சாதம், அதீத கடவுள் பக்தி, உடல்வாகு இருக்காது என்பதே ! என்னிடமோ கடைசி ஒன்று தான் உண்மை. கடவுளை எதிரியாக்க வேண்டும் எப்படியாவது நாத்திகனாக வேண்டும் என என் வாழ்க்கையோடு போராடி கொண்டிருக்கிறேன். பிராமணர்களோ மென்மையானவர்கள் நானோ கொடூரங்களை இரசிக்கிறேன் (அதனை தனிக் கட்டுரையில் கூறுகிறேன்). பிராமண பாஷை சுட்டு போட்டாலும் வர மறுக்கிறது. ஏதோ அவ்வப்போது எனக்கே தெரியாமல் எட்டி பார்க்கும். மனுதர்மத்திலும் மற்ற அனைத்து மத சனாதனத்திலும் ஒரு மனிதனை தன் சக மனிதன் அடிமைபடுத்துவது மகா பாதகம். அப்படி அடிமைபடுத்துபவனை ஆறுக்கு ஆறடி அறையில் அடைத்து வைக்க வேண்டும். இதில் இந்த பிராமணர்கள் ஒரு காலத்தில் ஒட்டு மொத்த சமூகத்தினையே அடக்கி வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கு தண்டனை ? உண்மையில் இந்த உலகத்தில் வாழத் தகுதியற்றவர்கள் நாங்கள் தான். இதில் எங்களுக்கு கோட்டா ஒதுக்கப்படவில்லை என அறைகூவல் வேறு ! பொதுவுடைமைக்கு போராடியவன் இந்த பிராமணர்களின் எதிரி ! இப்படி பிராமணீயத்தையே எதிர்க்கும் நான் ஒரு பிராமணன். அப்பா அம்மாவின் ஆசைக்கு தான் பூணூல் கூட அணிந்திருக்கிறேன். கடவுளை எதிர்க்க போய் மனிதர்களை புண்படுத்துவது அநாகரீகம். பெரியம்மாவின் சொந்தங்கள் எனக்கு சற்று நெருக்கமாக தெரிந்தது. அதில் ஒருவரிடம் நானும் நிறைய நேரம் பேசினேன். அவர் எனக்கு என்ன முறை என்று கூட எனக்கு தெரியாது. எப்படி அழைப்பது என அவரிடமே கேட்டேன். பெயர் சொல்லியே அழைக்கலாமே என்றார். இது மேற்கத்திய கலாச்சாரங்களில் எனக்கு பிடித்த விஷயமும் கூட. அப்பா அம்மா திட்டுவார்களே என அக்கா என அழைக்க ஆரம்பித்தேன். சின்ன குடும்பத்தின் சொந்தங்களே என்னை இப்படி குழப்புகிறது. இதில் பதினெட்டு குழந்தைகளை பெற்றெடுத்து அதில் பதினெட்டாவது குழந்தை முதல் குழந்தைக்கு பிறந்த குழந்தைக்கு என்ன சொந்தம் என யோசிக்க ஆரம்பித்தால் என் நிலைமையினை யோசித்து பாருங்கள். சொந்தக்காரர்களின் படாடோபம், பொறாமை, கோபம் என அனைத்தினையும் கண்டேன். இந்த ஒரு கல்யாணத்திலேயே சொந்தக்காரர்களின் ஆசை என்னை விட்டு பறந்து சென்றது. ஆனால் கல்யாணத்தின் சடங்குகள் என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் நான் முதன் முதலில் கண்ட முழு கல்யாணமும் இது தான்.
பிராமண அடையாளங்கள் அனைத்தினையும் அங்கேயே புதைத்துவிட்டு கிளம்பினேன். இந்த பிராமணன் என்னும் அடையாளம் என்னை எவ்வளவு தூரம் வதைக்கிறது தெரியுமா ? எனக்கு கடவுளை எதிரியாக்கத்தான் ஆசையே தவிர கோவிலையும் ஆழ்வார் பாசுரங்களையும் அல்ல. இரண்டும் என் ரசனையின் அங்கங்கள். இதையனைத்தினையும் வெளியில் கூறினால் நான் பிராமணன் அதனால் எனக்கு பிடித்திருக்கிறது என என் ரசனைக்கு முற்றுப் புள்ளியினை வைக்கின்றனர். இது எனக்கு என் தனிமனித சுதந்திரத்தினை பறிப்பது போல் இருக்கிறது. என் பிறப்பின் மேலேயே எனக்கு வெறுப்பு ஏற்படுகிறது.
இதில் அழகர்மலை சென்றிருந்தேன். இக்கட்டுரையின் தலைப்பினை பார்த்தபின் அக்கார அடிசல் என்றால் என்ன என கேள்வி உங்களுக்குள் தோன்றிருக்கும். அது ஒரு இனிப்பு பதம். அது செய்வது எப்படி எனக் கூறி இக்கட்டுரையுடன் இணைக்கிறேன்.
அக்காரஅடிசல்:                                                                                                                                           இந்த பதத்திற்கு தண்ணீரினையே உபயோகிக்க கூடாது. சின்ன ஆழாக்கு அரிசிக்கு இரண்டு டம்ளர் பாலினை ஊற்றி குக்கரில் வேக வைக்க வேண்டும். சாதம் ஆன பிறகு அதனை பாலிலேயே உருவம் தெரியாமல் மசிக்க வேண்டும். பின் வானலியில் பாலினை கொதிக்க வைத்து இந்த மசித்த சாதத்தினை அதில் போட்டு தேவையான வெள்ளத்தினையும் போட வேண்டும். அதில் பாலும் நன்கு சுண்ட வேண்டும். இந்த இரண்டு நிலையினையும் அடைந்தவுடன் ஒரு கரண்டி நெய்யினை ஊற்றி இறக்கினால் அது தான் அக்காரஅடிசல்.                                                                               இது என் அம்மாவிடமிருந்து வாங்கிய குறிப்புகள். தவறிருந்தால் கூறிவிடவும். இது அதீதமான இனிப்பு என்பதால் கொஞ்சம் தான் உண்ணமுடியும் அதிகமானால் திகட்டிவிடும்.
இப்போது அழகர்மலைக்கு வருகிறேன். அந்தக்கோவில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த தங்க கோபுரத்தினை சுற்றி அதனை பார்ப்பது போல் இருக்கும் சிற்பங்கள் நம்மையே மெய் மறக்க செய்யும் அளவில் இருந்தது. கோயிலினை சுற்றும் இடத்தில் ஆண்டாள் மற்றும் பெரியாழ்வாரின் பாசுரங்கள் என் கண்ணில் பட்டுவிட்டது. என்னை என்னாலேயே தடுக்க முடியாது என்பதால் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். பெரியாழ்வாரின் பிள்ளைத்தமிழும் ஆண்டாளின் அனைத்து பாசுரங்களும் எனக்கு மிகவும் பிடித்தது என்பதால் எங்கு கண்டாலும் வாசிக்க சென்றுவிடுவேன். இதில் ஒரு பாடலில் ஆண்டாள் பெரிமாளிடம் உனக்கு அக்காரஅடிசல் செய்து தருகிறேன் எனக் கூறுகிறாள். அதற்கு கீழுள்ள விளக்கத்தினை வாசித்தவுடன் தான் என் சிந்தை ஒருக்கணம் அப்படியே நின்றது. அக்காரஅடிசலுக்கு சர்க்கரை பொங்கல் என விளக்கம் கொடுத்துள்ளனர். மேலே மறுபடியும் செய்முறை விளக்கத்தினை படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள் அது சர்க்கரை பொங்கலா. . .? ருசி அறியவில்லை என்றாலும் உலகமே இலக்கியமாக மதிக்கும் நாச்சியார் திருமொழி பாடலின் விளக்கத்தினை தமிழ் வளர்த்த இடம் அசிங்கபடுத்தியிருக்கிறது. அதன் விபரங்களை அறிந்து கொண்டாவது இதனை எழுத வேண்டாமா ? தமிழும் மதுரையும் எனக்கு பிடித்த விஷயங்களுள் ஒன்று. இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்தது என நினைத்து கொண்டிருந்தேன் இன்று அப்படியொரு கூற்றினை என்னால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை. ஆண்டாளினை போல் ஒரு இலக்கியவாதியை தமிழ் என்றுமே மேண்டும் அடையப்போவதில்லை. இயற்கையை போலத்தான் இலக்கியமும் இதற்கும் போராடுங்களேன். ஆண்டாளின் ஒவ்வொரு பாசுரங்களிலும் உயிர் இருக்கிறது. அதனை ஏன் கொச்சப்படுத்துகிறீர்கள். ஆண்டாள் தமிழின மக்களிடம் செத்து கொண்டிருக்கிறாள். காப்பாற்றுங்களேன் ! ஐயோ ! நீங்கள் தமிழை மறந்ததை நான் மறந்து விட்டேன். . .                                                                                                                               Please save Aandaal. . . .

Share this:

CONVERSATION