சமீப காலமாக செய்தித்தாள்களில் அதிகம் ஓரினச்சேர்க்கையாளர்களை
பற்றி செய்தி வந்து கொண்டிருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர்களின் ஆதரவாளன் அல்ல நான்.
இருந்தும் இது போன்ற செய்திகள் என்னை எழுதத் தூண்டுகிறது. கலாச்சாரம் என்பதற்கு விளக்கம்
ஒன்றை நிச்சயம் நம்மால் கொடுக்க முடியாது. அது நாமாக கட்டி வைத்து கொண்ட அரண். எப்போது
ஒரு மனிதன் அந்த கட்டமைத்தலை உடைக்கிறானோ அப்போது அவன் கலாச்சாரத்திற்கு எதிரியாகிறான்.
அந்த எதிரியாகத்தான் ஓரினச்சேரிகையாளர்களை காண்கிறேன்.
ஆண் பெண் என்பது இருவேறு இனங்களின் அடையாளம். இதில் தான் எந்த
இனத்தினை தேர்வு செய்யலாம் என்பது தனிமனித உரிமை. ஒரு தனிமனித உரிமையினை சரியா தவறா
என மீடியா விவாதங்களும் விமர்சனங்களும் நடத்துவது எனக்கு முரணாக படுகிறது. இதன் மூலம்
ஒரு மீடியா நினைத்தால் உனது பெட்ரூம் வரை வந்து வேவு பார்க்கும் என்கிறார்களா அல்லது
இது தான் கலாச்சாரம் என்கிறார்களா ? கலாச்சாரம் நமக்கு என்ன கற்று கொடுக்கிறது ? உனக்கான
இனத்தினை நீ தேர்வு செய்வது தவறு என பாடம் எடுக்கிறது. இன்னும் தார்மீகமாக கூற வேண்டுமெனில்
உனது பிறப்புரிமையினை அனுபவிக்காதே என சாந்தமாக கூறுகிறது.
எனக்கு வயது பதினெட்டு. ஒரு ஐம்பத்தி எட்டு வயது மனிதனை பெயர்
சொல்லி அழைத்தால் என்னை இந்த சமூகம் மார்க்கமாக பார்க்கிறது. அப்படி பெயர் சொல்லி அழைப்பதன்
மூலம் அம்மனிதன் தனக்காக கட்டமைத்து வைத்துள்ள மரியாதை என்னும் பண்டம் கெட்டுவிடுகிறதா
? மேற்கத்திய நாகரீகத்தினால் கொஞ்சம் ஈர்க்கப்பட்டவன் தான் நான். அதன் விளைவு தான்
மேற்கூறியது. அந்த கலாச்சாரத்தினை இங்கு திணிக்கவில்லை. பெயர் என்பது மரியாதையின் ஒரு
அங்கம் என்பதை மறந்து அவமானத்தின் சின்னமாக இங்கு மதிப்பதால் எனக்கு அது அன்னியமாகத்
தெரிகிறது.
நான் தலைப்பினை விட்டு விலகிச் செல்கிறேன் என நினைக்காதீர்கள்.
ஓரினச்சேர்க்கையாளர்களை பற்றி கூறவேண்டுமெனில் இது போன்ற அனைத்து விஷயங்களையும் நான்
கூறித்தான் ஆக வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் கலாச்சாரம் என்னும் சகதியில் சிக்கியதே
! மேலும் நாம் அன்றாடம் உபயோகிக்கும் அனைத்தும் கலாச்சார சீர்கேட்டின் அடையாளங்களே.
சில கட்சிகள் பெண்கள் ஜீன்ஸ் அணிவதை சீர்கேடு என்றனர். இதனை நான் முற்றிலும் எதிர்க்கிறேன்.
ஆடை என்பது தனிமனித விருப்பு வெறுப்புகளை சார்ந்தது. சில வருடங்களுக்கு முன்பும் சென்ற
வருடமும் சில கும்பல் இளைஞர்களின் get together இலும் பப்பிலும் நுழைந்து அங்கிருந்த
பெண்களையும் குடி பாட்டில்களையும் உடைத்துள்ளனர். என்னைக் கேட்டால் இதனைத்தான் சீர்கேட்டின்
ஆரம்பம் எனக் கூறுவேன். சுதந்திரத்தினை பறிக்கும் விஷயத்தினை கலாச்சாரம் என எப்படி
ஒப்புக்கொள்வது ? இப்படி யோசிக்கும் மனிதர்கள் என்னைப் போல் விரல் விட்டு என்னும் அளவில்
தான் இருக்கின்றனர். மீதம் பேரின் நிலை அத்துடன் ஒன்றிவிட்டார்கள். இன்றைய மேட்ரிமோனியில்
பார்த்தால் கூட traditional ஆ பொண்ணு வேணும் என முக்கால் வாசி பேர் கேட்கின்றனர். அவர்களிடம்
அதன் அர்த்தம் கேட்டால் அம்மா பேச்ச கேக்கணும், புடைவை கட்டணும், எதிர்த்து பேசக்கூடாது,
தனிக் குடித்தனம் போகக் கூடாது, அனைத்து நிலைமையினையும் அனுசரித்து போகணும் என அடுக்கிக்
கொண்டே செல்வர். என் கேள்வி இது தான் உங்கள் நுனி நாக்கு ஆங்கில tradition –ஆ ? இவர்களின்
வழியில் கலாச்சாரத்திற்கு விளக்கம் கொடுக்க வேண்டுமெனில் இப்படித்தான் வரும் - “எதிராளியின்
விருப்பு வெறுப்பு பற்றி எனக்கு கவலையில்லை, என் இஷ்டத்திற்கு அவன் அடி பணிய வேண்டும்“
சுதந்திரத்தினை உணர்த்தாத எந்த ஒரு தத்துவத்தினையும் என்னால்
கலாச்சாரம் என ஏற்றுக் கொள்ளமுடியாது. நான்கு வயது குழந்தையினை பெற்றோர்கள் அடிக்கிறார்கள்.
அது கொலைக் குற்றத்திற்கு சமமானது. தாய்லாந்தில் ஒரு விபச்சாரி என் தொழிலில் சுதந்திரத்தினை
உணர்கிறேன் அதனால் தேசப்பற்று அதிகம் என்கிறாள். இதே வசனத்தை சராசரி தமிழனால் கூற முடியுமா
? நமக்கு வாழ்க்கை என்னும் விஷயத்தில் வாய்ப்புகள் இல்லை. இது போனால் மற்றொன்று என்று.
அப்படியிருக்கும் போது ஏன் சுதந்திரத்தினை பறிகொடுத்து அடைக்கப்பட்ட நான்கு சுவர்களுக்குள்
வாழ வேண்டும், அதுவும் கலாச்சாரம் என்ற பெயரில்.
இந்தியாவிலும் சுதந்திரத்தினை உணர்கிறார்கள். ஐ.டி யில் ரெஸெஷன்
ஒன்றுவந்தால் போதும் உடனே நல இளைஞர்கள் தங்கள் உரிமையினை கையில் எடுத்து கொண்டு தற்கொலை
செய்து கொள்கிறார்கள். அப்போதும் எழுதுவேன் இந்தியக் கலாச்சாரம் என்று !
ஓரினச்சேர்க்கையாளர்களே ஓடிவிடுங்கள். ஐரோப்பா போன்ற உரிமையினை
மதிக்கும் கண்டத்திற்கு சென்றுவிடுங்கள். உங்களை கலாச்சாரம் என்ற பெயரில் மீடியா மக்கள்
முன் மானபங்கம் படுத்துகிறது. அப்படி ஓடினால் நீங்கள் அடைந்த தேசத்திலிருந்து உரத்த
சொல்லுங்கள் வந்த காரணத்துடன் WE
ARE INDIANS !
CONVERSATION