கடவுள் !இந்த சமூகத்தினை பொறுத்தவரை எதனை ஆரம்பித்தாலும் அதை கடவுளுடன் ஆரம்பிக்க வேண்டும் என்று ஐதீகம் கொண்டுள்ளனர்.எனக்கோ அது மிகவும் முரண்பட்ட விஷயம்.கடவுளுடன் என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை என்னால் அதன் கோட்பாடுகளுடன் சமாதானம் ஆகவும் முடியவில்லை.நானும் இந்த சமூகத்தில் ஊறிவிட்டதால் எனக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கும் தூரத்தினை வார்த்தைகளில் கடக்க முடிகிறதா என முயற்சி செய்கிறேன்.
இந்த கட்டுரையினை ஒரு புத்தக விமர்சனம் என்று கூறுவதிலும் தவறில்லை.சுஜாதா எழுதிய ‘கடவுள்’ என்னும் புத்தகம் தான் என்னுள் கடவுள் பற்றிய பழைய நினைவுகளை தூண்டும் விதம் அமைந்தது.கடவுள் என்னும் பெயரினை பார்த்தவுடன் வாங்கணுமா என யோசித்தேன் அதன் உள்ளடக்கத்தில் இரண்டாவது தலைப்பாக ‘கடவுள் இருக்கிறாரா ?’ என்பதை பார்த்தவுடன் வாங்கிவிட்டேன்.முதலில் ‘வணக்கம் இறைவா’ என்னும் பகுதியில் பல மதங்களின் தத்துவங்களினை பற்றி எழுதியிருந்தார்.ஏற்கனவே ‘தாந்தேயின் சிறுத்தை’ என்னும் கட்டுரை தொகுப்பில் பல மதங்களை பற்றி படித்துள்ளேன்.அதில் சீனாவின் தாவோயிச தத்துவமும் நமது அருணகிரிநாதரின் தத்துவமும் ஒன்று என்று கூறுகிறது.இது மத விவாதம் என்பதால் அதனை இங்கே புறக்கணித்துவிடுகிறேன்.மேலும் இந்த புத்தகத்தினை படித்த பின்பு தான் நான் ஆத்திகனா நாத்திகனா என்று எனக்குள் இருந்த கேள்வி மாறி இறையியலா அறிவியலா என்றாகிவிட்டது.பிரபஞ்சம்,கடவுள்,சிருஷ்டி என அனைத்திற்கும் ஆதிமூலமாக இருப்பது இயற்பியல் என்கிறார்.இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது என கேட்டால் இது இப்படி இருப்பதால் தான் நீ இப்படி கேள்வி கேட்கிறாய் என்று பதிலளிக்கிறார்.It is blunt but logically right.இதனை படித்த பின் தான் எனக்கு இயற்பியலை எடுத்த ஆசானின் ஞாபகம் வந்தது.அவர் அடிக்கடி கூறுவார் ஒரு இயற்பியல்வாதிக்கு கூழாங்கற்களும் ஏரோப்ளேனும் ஒன்று தான் என்று.காரணம் அவனை பொறுத்தவரை இரண்டுமே particle.கடவுள்,பிரபஞ்சம் என பல விஷயங்களை படித்துக் கொண்டிருக்கும்போது அண்டசராசரங்களையும் ஒரே வார்த்தையில் அடக்கிய அவரும் எனக்கு அறிவியலின் பிரதிநிதியாகத் தெரிகிறார்.
இயற்பியலின் பல தத்துவங்கள் இந்த பூமி எப்படித் தோன்றியது எனக் கூறுகிறது.அந்த ஒவ்வொரு தத்துவங்களின் பின்னிலும் ஒரு கேள்வியினை மதவியலாளர்களோ அறிவியலாளர்களோ எழுப்புகிறார்கள்.அதன்படி அடுத்த ஒரு தத்துவம் பிறக்கிறது.ஆக தத்துவங்களின் தொடர்ச்சி பிரபஞ்சத்தின் தோற்றத்தினை நிர்ணயிக்குமா ? நிச்சயமாக இல்லை.பிக் பேங் தியரி என்னும் தத்துவத்தின் அடிப்படையில் இரண்டு ப்ரோட்டான்களை அதி வேகத்தில் மோத விடுவதன் மூலம் ஒரு துகள் உண்டாகும். அதன் பெயர் gods particle.அதனை பிடித்துவிட்டால் இந்த பிரபஞ்சத்தின் முதல் பொருளினை கண்டுபிடித்துவிடலாம் என்று உலகத்திடம் சவால் விட்டனர்.அதிலும் சிக்கல்!இரண்டு ப்ரோட்டான் மோதுகிறது என்று வைத்துக் கொண்டால் பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் அது எங்கிருந்து வந்தது ? இதற்கு சுஜாத மூன்று வாய்ப்புகளை வாசகர்களுக்கு அளிக்கிறார் அதாவது,
1.ஒரே தத்துவத்தில் ஒட்டு மொத்த பிரபஞ்சமும் அடங்க வேண்டும்                          2.Chain of theoris                                                                                           3.ஒரு எல்லையினை தாண்டி செல்ல முடியாது என்று கடவுளை நம்ப வேண்டும்.
இதனை எல்லாம் படிக்கும் போது கடவுள் இல்லை என்று தோன்றினாலும் சில சமயம் மாற்றியும் தோன்றுகிறது.நான் கடவுளை விரோதிக்க ஆரம்பித்த காலமும் காரணமும் சுவாரஸ்யமானது.பிறப்பால் பிராமணன் என்பதால் என்னை சிறு வயதிலிருந்து அடிக்கடி கோயிலுக்கு கூட்டிச் சென்றனர்.விவரம் தெரியாத வயதில் அது ஒரு கட்டிடமாகவும் பெரியவர்கள் கூறுவதால் உள்ளே கடவுள் உட்காந்திருப்பதாகவும் நானே மனதினுள் சித்தரித்துக் கொள்வேன்.தொடர்ந்து அதே இடத்திற்கு என் விருப்பு வெறுப்புகளை கேட்காமல் கூட்டிச் செல்வதால் அது எனக்கு பிடிக்காத இடமானது.நான் ஹிந்தி கற்றுக் கொள்ள ஆரம்பித்த காலத்தில் சில படிநிலைகள் கடந்தபின் ஒரு கபீர்தாசரின் பாடல் ஒன்றை கடக்க நேரிட்டது.அதன் வரிகளை மறந்துவிட்டேன்.அதன் அர்த்தமோ “பர்தா அணிந்து முகத்திரையின் மூலமாக இறைவனை தேடுகிறாயே, அவனோ உனது மூச்சின் வழியாக உன்னுள் ஒளிந்து கொண்டிருக்கிறான்”.இது காலப்போக்கில் என்னுள் அஹம் ப்ரும்மாஸ்மி(மனம் தான் கடவுள்) என்னும் கோட்பட்டினை திணித்தது.இதற்கிடையில் தோன்றியது தான் இஸ்லாமிய இச்சை.இப்படி பல தத்துவங்கள் என்னுள் புதிர் போட்டுக் கொண்டிருக்கும்போது தான் அம்மா கூறிய விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.சிறு வயதில் அம்மா என்னிடம் வுள்கட என்று வேகமாக கூறினால் கடவுள் என்று அர்த்தம் வரும் என்றாள்.அர்த்தம் புரியாத காலத்தில் கோயிலுக்குள் கிடப்பவன் தான் கடவுள் என நம்பிக் கிடந்தேன்.பெரியாரினை படிக்க ஆரம்பித்தவுடன் அஹம் பிரும்மாஸ்மி என்னும் தத்துவம் அதனுடன் கலந்து அம்மவிடம் கேட்கத் தோன்றியது “மனிதனால் வடிக்கப்பட்ட சிலை கடவுளெனில் கடவுளை படைத்தது மனிதன் தானே…?” இன்றுவரை கேட்கவில்லை.வுள்கட,அஹம்ப் பிரும்மாஸ்மி போன்ற கோட்பாடுகளை என்னுள் போட்டு பிதற்றும் போது எனது பிம்பத்தினையே நான் காண்கிறேன்.
இந்த மதம் கடவுள் அனைத்தும் மனிதன் தன் தேவைக்காக கட்டமைத்து வைத்த ஒரு சுவர்.இதனை நான் நிராகரித்தாலும் அறிந்து கொள்ள வேண்டும் என நான் ஆசைப்படுவது சிருஷ்டிகர்த்தாவினை.திசை அறியாப் பறவையினைப் போல சுற்றிக் கொண்டிக்கிறேன் எங்கே வழியில் சிருஷ்டிகர்த்தாவினை காண்பேன் என….

Share this:

CONVERSATION