ஒரு நைஜீரியக் காதல் கதை
பெருவாரியாக் ஆண்களால் சூழப்பட்டிருக்கும் இலக்கியத்துறையில் துல்லியமாக பதிவு செய்யப்படும் பெண் கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாத தன்மையை பெற்றுவிடுகின்றன. பெண்களின் அகவுலகம் அறியப்படாத ரகசியங்களால் நிரம்பியிருக்கிறது. உலக இலக்கியங்கள் எத்தனையோ வழிகளில் அதனை திறக்க முற்பட்டாலும் அதன் அறியப்படாத பக்கங்கள் பெருகிய வண்ணமே இருக்கின்றன. அவ்வகையான சில ரகசியங்களை நைஜீரிய எழுத்தாளரான அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் திறக்க முற்பட்டிருக்கிறார். அவருடைய நாவலான “தீக்கொன்றை மலரும் பருவம்” நாவலை தமிழில் லதா அருணாச்சலம் சுவை குன்றாமல் மொழிபெயர்த்திருக்கிறார்.
நாவல் இலக்கியம் தொடர்ந்து முரண்பட்ட மனிதர்களை சந்திக்க வைப்பதில் இன்பம் காண்கிறது. அவர்களின் அகச்சிக்கலை கண்டு கெக்கலியிடுகிறது. இந்நாவலில் கைம்பெண்ணான ஹஜியா பிந்த்தா விளிம்பு நிலையிலிருந்து வந்து சமூகப்பிரச்சினைகளை விளைவிக்கும் ரௌடியான ரெஸாவை சந்திக்கிறாள். எதிர்பாராத சந்திப்பு இருவருடைய வாழ்க்கையையும் மாற்றத் துவங்குகிறது. தனது இளைய மகனை இழந்த சோகமும் தாயன்பை உணராத ரெஸாவின் நினைவுகளையும் இவர்களின் உறவு கிளருகிறது. ஆனால் நவீன வாழ்க்கை நினைவின் உறவுகளுக்கு புதிய முகவரிகளை அளிக்கின்றன. அவ்வகையில் தாய் மகன் எனும் நினைவிலான கற்பனை உறவுகளை கலைந்து யதார்த்த வாழ்வில் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொள்கின்றனர். ஒருவர் மற்றவரின் ஆற்றாமைகளை பூர்த்தி செய்கின்றனர். சமூகம் இவர்களின் உறவுக்கு அளிக்கும் முத்திரைகள் அவமானங்களை சுமக்க வைக்கிறது. சங்கடம் கொள்ள வைக்கிறது. சமூகத்தை விட்டு விலகவும் முடியாமல், உறவுகளை துண்டிக்கவும் இயலாமல் நகரும் அவ்விருவரின் முரண்பட்ட இயல்பு வாழ்க்கையை துல்லியமாக, அதே நேரம் ரம்மியமாக எழுத்தாளர் பதிவுசெய்கிறார்.
சான்சிரோ எனும் பிராந்தியத்தில் இந்நாவல் களம் கொள்கிறது. அங்கு நிகழும் அரசியல் மாற்றங்களும், அதிகார வேட்கையும், அதற்கென நிகழும் வன்மமான போட்டிகளுக்கும் நாயகன் ரெஸா துணைபோகிறான். அதிகாரத்தின் கைக்கூலிகளாக மாற்றப்படும் விளிம்பு நிலை மக்களிடமிருந்து பறிக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமைகள். சுகாதாரமான வாழ்விடமும், வாழ்வியலுக்கேற்ற கல்வியும் பறிக்கப்படுவது குறித்த அறியாமையில் அதிகாரம் அவர்களை ஆட்கொள்கிறது. நயவஞ்சகமாக பேசி அவர்களின் சிந்தனையை மழுங்கடித்துவிடுகிறது. சமூகப் போராளிகளாக கற்பனை செய்ய வைத்துவிடுகிறது. நாயகன் ரெஸாவும் விதிவிலக்கல்ல. போதைப்பொருட்களும் சமூக அறங்களுக்கு எதிரான திருட்டும் கொள்ளையும் இயல்பாகிப் போவதன் பிண்ணனியையும் அவர்களின் வாழ்க்கையோடு பதிவு செய்திருப்பது அச்சமூகத்தின் ஆவணமாக விளங்குகிறது.
மறுமுனை ஹஜியா பிந்த்தாவின் வாழ்க்கை குறித்த விவரிப்புகள் இந்த அரசியல் களேபரங்களுக்கு இடையில் அமையப்பெற்றிருக்கும் குடும்ப அமைப்பு குறித்தான பார்வையாக அமைகிறது. இயந்திரம் போல அன்பற்று நகரும் குடும்ப வாழ்க்கையில் ஒரு பெண்ணின் அடிப்படை தேவை எதுவாக அமைகிறது எனும் கேள்வியில் நாவலில் இடம்பெறும் ஒவ்வொரு பெண்ணும் பயணம் செய்கின்றனர். மேலும் இந்நாவலில் அனைத்து வயதிலும் குறைந்தது ஒரு பெண் கதாபாத்திரமாவது இடம்பெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது. அனைவரும் இழப்பை சுமக்கின்றனர். அன்பை தேடுகின்றனர். இழப்பும் அன்பும் ஆடும் கண்ணாமூச்சியில் சிலர் குளிர் காய விரும்புகின்றனர்.
ஹஜியா பிந்த்தாவும் ரெஸாவும் ஒருவர் மற்றவரின் வலிகளை சுமக்கத் தயாராக இருக்கின்றனர். ரெஸாவின் அடிப்படைத் தேவைகளை உணரவைக்கிறாள். பிந்த்தாவுடைய அன்பின் தேடல் ரெஸாவிடம் பூர்த்தியாகிறது. ஆனாலும் அவர்களுக்கு இடையில் இருக்கும் இழந்த மகனின் நினைவும், பிரிந்த தாயின் நினைவும் சங்கடமாக அமைகிறது. நவீன வாழ்க்கை மரபான சித்தாந்தங்களுக்கு முரண்பட்டு நிற்கும் தன்மைகொண்டது. மரபை பின்தொடரமுடியாமலும் புதிய வாழ்க்கை முறையில் தைரியம் கொள்ள முடியாமலும் திணறி ஊசலாடும் மத்திய தர குடும்பத்துக் கதைகளுக்கு பொது உதராணமாக பிந்த்தாவின் வாழ்க்கை அமைகிறது. சுதந்திரம் குறித்த சிந்தனை இருவரிடம் மேலோங்கியிருக்கிறது. குடும்பம் எனும் அமைப்பிலிருந்து விடுபட விரும்புவதும், அன்பு எனும் சங்கிலியில் சிக்கிக் கொள்ள விரும்புவதும் ஒரே தருணத்தில் நிகழ்கிறது. நாவலின் ஒவ்வொரு பக்கங்களிலும் முரண்கள் ததும்புகின்றன. நாவலின் கடைசிப் பகுதிகளை நெருங்கும்போது பிந்த்தாவும் ரெஸாவும் கண்ணாடியில் தெரியும் பிம்பத்தைப் போல உருமாறிக் கொள்கின்றனர். ஒருவரின் தேவைகளையும், நிறைகளையும் பிறிதொருவரிடமிருந்து முழுதுமாக அறிகின்றனர்.
சமகால நாவல் இலக்கியத்தில் நல்லதொரு முன்னுதாரணமாக இந்நாவல் விளங்குகிறது. வரலாற்று நிகழ்வை, அரசியலை, அதன் சமூகத்தை, அதனூடே இயல்பாக இருக்க விரும்பும் குடும்ப அமைப்பை சமமான அளவில் விவரித்து செல்கிறார். வழக்காற்று மொழியிலேயே நாவலை எழுதியிருக்கிறார். வணிக திரைப்படத்திற்கொப்ப வன்முறைகளும், திருப்பங்களும் நாவல் முழுக்க விரவிக் கிடக்கிறது. ஆனால் அச்சமூகத்தின் பிரதிபலிப்பு என்பதை உணரத் துவங்கும் தருணத்தில் சுவாரசியத்திற்கு பதில் அச்சமூகம் குறித்த பச்சாதாபமே மேலோங்குகிறது. ஹஜியா பிந்த்தாவின் கதாபாத்திர வடிவமைப்பும், அவளுடைய காதல் ஏக்கங்களும் நவீன இலக்கியத்தின் மறக்கவியலாத பெண் கதாபாத்திரங்களில் நிச்சயம் இடம்பெறும்.
- கணையாழி
வாழ்வின் தீராத உரையாடல்
இலக்கியத்தின் மையப்பொருளாக பல ஆண்டு காலம் பல்வேறு மொழிகளில் இருந்துவருவது மரணம். மரணத்தை அறிய விழையும் வேட்கை மனித குலத்தின் தொடக்கத்திலிருந்து இயல்பாக இடம்பெற்று வருவது. அதுகுறித்து உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு தத்துவ நிலைப்பாடுகளுக்கு இலக்கியம் உருவம் கொடுக்க முனைந்திருக்கிறது. செவ்வியல் இலக்கியங்களிலிருந்து நவீன கதையாடல்கள் வரை இந்த தன்மை நீட்சி கொள்கிறது. மரணம் குறித்த அனைத்து கோப்டாடுகளும் வாழ்வை மதிப்பிடுவதற்கான வழிமுறையாக மொழியில் மாற்றப்படுகிறது. மதங்களும் இத்தன்மைக்கான சாட்சியங்களை தன்னுள் கொண்டிருக்கின்றன. விதவிதமான வடிவங்களை மரணம் மொழியளவில் எடுத்துக்கொண்டாலும் அதைக் குறித்த முழுதான அறிதல் மொழிக்கு அப்பால் எப்போதும் நின்றுகொண்டிருக்கிறது. அதற்கு நவீன இலக்கியம் கொடுத்திருக்கும் பல உருவங்களில் தனித்துவமாக நிற்கிறது மார்ட்டீன் ஓ’ கைன் ஐரிஷ் மொழியில் எழுதிய Cre na Cille எனும் நாவல். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு மூல நூல் வெளியாகி அறுபது ஆண்டுகளுக்கு பிறகு சாத்தியப்படுகிறது. Alan Titley - The Dirty Dust எனும் தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆங்கிலத்தில் ஓராண்டு இடைவெளியிலேயே Liam MacCon Iomaire மற்றும் Tim Robinson ஆகியோரது உழைப்பில் மற்றுமொரு மொழிபெயர்ப்பும் வெளியாகிறது. ஐரிஷ் மொழியின் செவ்வியல் இலக்கியத்தில் இடம்பெறும் இந்த நவீன நாவலை Alan Titley இன் மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் ஆர்.சிவக்குமார் “வசை மண்” எனும் பெயரில் செறிவுற மொழிபெயர்த்துள்ளார்.
அடுக்கடுக்காக ஆங்கிலத்தில் வெளியாகும் இரண்டு மொழிபெயர்ப்புகளின் வழியே இந்நாவல் தன்னுள் கொண்டிருக்கும் சவாலை நம்மிடம் அறிமுகப்படுத்துகிறது. மொழியில் இருக்கும் பெரும் சாவலை மொழிபெயர்ப்பாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியை இந்நாவல் முன்வைக்கிறது. மொழியியல் ஆர்வலரான மார்ட்டீன் ஓ’ கைன் ஒரு மழைநாளில் நண்பருடன் பெண் சடலம் ஒன்றை புதைக்க செல்கின்றார். அப்போது மழையில் சரியான இடத்தை கண்டுபிடிக்க இயலாமல் ஏற்கனவே ஒரு பெண் புதைக்கப்பட்ட இடத்தின் மேல் அவளையும் புதைக்கின்றனர். அப்போது அவருடன் வந்தவர் ஒரு தகவலை சொல்கிறார். ஏற்கனவே புதைக்கப்பட்டவள் புதிதாக புதைக்கப்படுகிறவளுடனான கருத்து முரண்பாட்டில் இருந்தவள் என்று. ஒரே இடத்தில் புதைக்கப்படுவதால் இருவருக்கிடையில் பேச்சுவார்த்தையில் உரசல்கள் நீளும் என்று ஆசிரியரின் நண்பர் சொல்கிறார். இங்கிருந்தே வசை மண் நாவலுக்கான சிந்தனையை ஆசிரியர் எடுக்கிறார்.
1940 களில் இந்நாவலை ஐரிஷ் மொழியில் எழுதுகிறார். நாவலில் உரைநடைக்கான இடத்தை முழுதுமாக நீக்கிவிடுகிறார். மேலும் நாவலில் காலம் நகர்வதில்லை. அயர்லாந்தின் கன்னிமாரா எனும் இடத்தில் இருக்கும் கல்லறைத் தோட்டமே நாவலின் கதைக்களம். அங்கு புதைக்கப்பட்டிருக்கும் பிணங்களுக்கிடையேயான முடிவுறாத உரையாடல்களும் அதற்கிடையில் அவர்கள் காக்கும் மௌனங்களுமே நாவலாகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நிச்சயிக்கப்பட்ட காலத்துடன் உரைந்துவிடுகிறது. வாழ்ந்த வாழ்க்கையை அசைபோடுவதும் புதிதாக வரும் பிணங்களிளிடமிருந்து தங்களுடைய மரணத்திற்கு பிறகான நாட்களின் சமூகத்தையும். அதில் தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதுமே அவர்களுக்கான அன்றாடமாகிறது.
உரைநடையில் கதாபாத்திரங்களை தனித்தனியாக ஆசிரியர் குறிப்பிடுவதில்லை. தொடர்ந்து நிகழ்த்தப்படும் உரையாடல்களே நாவலின் பக்கங்களை நிறைக்கின்றது. தமிழ் வாசகர்களுக்காக சில அடிக்குறிப்புகளும் ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்த முன்குறிப்பு விளக்கங்களும் நூலில் இடம்பெறுகிறது. நாவலின் அளவில் அவரவர்களின் பேச்சின் வழி மட்டுமே கதாபாத்திரங்களை வாசகர்களுக்கு எளிமையாக அறிமுகப்படுத்துகிறார். பக்கங்கள் நகர நகர வாசகர்களுக்கு ஒவ்வொரு பிணங்களின் வாழ்க்கையும், அவர்களின் ஆசைகளும் தெளிவாக புரிபடத் துவங்குகின்றன. இடையிடையில் ஊதுகொம்பு எனும் கதாபாத்திரத்தின் வழியே பேசுகிறார். சிறிய அளவில் இடம்பெறும் ஊதுகொம்பின் சொற்கள் பிணங்களின் உரையாடல்களுக்கு தத்துவ முகத்தை அளிக்கிறது. கல்லறைத் தோட்டத்தை குடியிறுப்பாக உருவகிக்க உதவுகிறது.
புதைக்கப்பட்டவர்களின் உரையாடல்கள் பெரும்பாலும் வசைகளாக, வம்புப்பேச்சாக அவரவர்களின் பார்வையில் எழுப்பப்படும் நினைவோடைகளாக எழும்புகிறது. எல்லோருடைய பேச்சிலும் பிறிதொருவர் காயப்படுகின்றனர். நாவலின் மையக்கதாபாத்திரமக அமைவது கெய்த்ரியானோ பௌடீன். அவளை புதைப்பதிலிருந்தே நாவல் ஆரம்பம் கொள்கிறது. அவள் மீது ஏற்கனவே காழ்ப்பு கொண்டிருக்கும் பலர் அவள் மீதான வசையையும் அவளின் இழி நடத்தையையும், வாங்கிய கடனை திருப்பி அடைக்காத குணத்தையும் நினைவுபடுத்திய வண்ணமிருக்கின்றனர். மேலும் அவளுக்கும் அவளுடைய சகோதரியான நெள் பௌடீனுடனான பனிப்போரையும் நினைவுபடுத்திய வகையில் வசைபாடுகின்றனர். உயிருடனிருக்கும் நெள்ளின் மரணத்தை விரும்பும் மனதையும் வாழும்போது நெள் பௌடீன் தனக்கு செய்ததாக ஏற்றி சொல்லப்படும் பொழிப்புரையும் கெய்த்ரியானோவின் கதாபாத்திரமாக உருக்கொள்கிறது. மேலும் அவளுடைய சொந்தக்காரியான பாபா பௌடீனின் நிலத்தை சரி பங்காக நெள்ளிற்கும் கெய்த்ரியானோவிற்கும் பிரித்துக் கொடுப்பதில் சரி விகிதமாக அமையாது எனும் கற்பனை அவளின் தீய எண்ணங்களுக்கு வலு சேர்க்கிறது. மேலும் பொருளாதார ரீதியில் நெள்ளை விட கெய்த்ரியானோ பின்தங்கியவள். இத்தகவல் கெய்த்ரியானோவிடம் இருக்கும் தீய எண்ணங்களுக்கு பொருளாதார ரீதியான தாழ்வு மனப்பான்மை காரணமாக இருக்கக்கூடும் எனும் காரணத்திற்கு வலு சேர்க்கிறது. இறந்தபின்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் தன் மகனுக்கு நிலத்தில் ஒரு பகுதி சென்று சேருமா எனும் எண்ணங்கள் அவளின் சிந்தனைகளாக மரணித்திற்கு பின் நீள்கிறது.
கெய்த்ரியானோவைப் போன்று ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்கு தேவையான தகவல்களை தேடும் வேட்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். முதலாம் உலகப் போரில் புதைக்கப்பட்டவர்கள் இரண்டாம் உலகப் போரோடு தொடர்பற்றவர்களாக இருக்கின்றனர். கதை இரண்டாம் உலகப் போரின் காலக்கட்டத்தில் நிகழ்கிறது.. ஆதலால் ஹிட்லரை ஆதரிப்பவர்களும், அவரை எதிர்ப்பவர்களும் ஒருங்கே பேச்சில் ஈடுபடுகின்றனர். எழுதி வெளியாவதற்கு முன்பே இறந்த கவிஞர் தன்னுடைய இலக்கியத் தன்மையை பறைசாற்றியபடி இருக்கிறார். ஒவ்வொரு வீடாக திருடும் மனிதனை அங்கிருக்கும் பிணங்களில் பலர் குறை கூறுகின்றனர். இவர்கள் அனைவருடைய உரையாடல்களும் ஒரு முற்று புள்ளி நோக்கி நகர்வதில்லை. மாறாக வாழும்போது பேசிய சொற்களை இறந்தபின்னும் பிரதி எடுக்கின்றனர்.. அவர்கள் வாழும்போது முன்வைத்த குற்றாச்சாட்டுகளை மீட்டுரைக்கின்றனர். ஆனால் அதற்கான தீர்வை எதிர்நோக்க மறுக்கின்றனர். வாழ்ந்த வாழ்க்கையும் அதுவரை மேற்கொண்டிருந்த பார்வையையும் பகுத்தறிய யாருமே விரும்புவதில்லை. தங்களுடன் கருத்தில், வாழ்க்கையில் முரண்பட்டவர்கள் சீக்கிரம் கல்லறைத் தோட்டத்தை வந்துசேர வேண்டும் என்பதே பெருவிருப்பமாக அமைகிறது. அவரவர்களின் பிரச்சினைகளிலிருந்தே பிறரை மதிப்பீடு செய்வதில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
புதிதாக வரப்படும் பிணங்கள் நாவலில் பெரும் பங்கு வகிக்கின்றன. கதையின் காலம் புதுப் பிணங்களாலேயே நீட்சி கொள்கிறது. புதிதாக வருபவர்களிடம் அவரவர்களின் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டவர்களின் வாழ்க்கையை, அவர்கள் இறந்த பின் நிகழ்ந்த வாழ்க்கையை அறிய விழைகின்றனர். அன்புடன் விசாரிக்க வேண்டிய விஷயங்களை குறைவாகவும், சபிக்க விரும்பும் மனிதர்கள் சீரழிந்துவிட்டார்களா எனும் கேல்வியை விரிவாகவும் கேட்கின்றனர். பின்னிருக்கும் கேள்வியுடன் அவர்வர்களின் ஆசைகள் பேச்சின் மணிமகுடமாக அமைகிறது. தன்னுடைய தீராத ஆசைகளை உயிருடன் இருப்பவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்களா எனும் எண்ணம் அவர்களின் அமைதியை குலைத்துவிடுகிறது. இறந்தவர்களுக்கு குழப்பமாகவும் தெளிவற்றதாகவும் இருக்கும் ஆசை அவர்களை புதைத்திருக்கும் இடம் குறித்தான கேள்வியாக அமைகிறது. கல்லறைகளை அவர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வூரில் பிரித்திருக்கின்றனர். வாழ்ந்த வாழ்க்கையை விட புதைக்கப்பட்ட இடம் கௌவரமான இடமாக அமைய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர். மாற்றி புதைத்திருப்பார்களோ எனும் கேள்வி அவர்களை நிம்மதியிழக்கச் செய்கிறது. இதுநாள் வரை தான் வாழ்ந்திருக்கும் வாழ்க்கைக்கான நன்றிக்கடனாக சிறந்த இறுதி மரியாதையை இவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும் எனும் ஏக்கத்தை பழிப்புடன் பறைசாற்றிக்கொண்டேயிருக்கிறார்கள். மற்றொரு கவலை அவர்களின் மேல் பதித்திருக்கும் சிலுவையின் வகை. அவ்வூரான கன்னிமாராவில் இருக்கும் பளிங்கில் செய்திருக்க வேண்டும் என்று ஏங்குகின்றனர். மரணத்தை செவ்வியல் தன்மையுடன் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.
இவ்வனைத்து விஷயங்களும் நாவலின் அடிநாதமாக இருக்கும் அபத்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. வஞ்சம், பொறாமை, கபடம், கள்ளம் முதலிய அத்தனை முரணான சிந்தனைகள் வாழ்க்கையை செப்பனிட மறுக்கிறது. இவை நிறைந்த வாழ்க்கையை வாழாது, சக மனிதர்களின் மீதான மனிதத்தையும் குலைத்து பேராசைகளுடன் இறப்பதற்கான வாய்ப்பை நல்குகிறது. ஆனால் சொற்களின் வழி மட்டுமே திருப்தியை உணரக்கூடிய காலத்தில் கன்னிமாரா பளிங்கையும் கௌரவமான அடக்கத்தையும் விரும்புபவர்களாக தங்களை நிறுவிக்கொள்கின்றனர். வாழும்போது பேசிய அத்தனை உரையாடல்களையும் மீட்கும் போது அவர்களை துரத்திய அத்தனை குற்றாச்சாட்டுகளும் மீண்டெழுகின்றன. அவற்றிடமிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள ஓயாமல் வாதாடுகின்றனர். தங்களைப் பற்றியே பேசுகின்றனர்.
சக மனிதனை நினையாமல் தங்களை சுற்றியே உலகை கட்டமைத்துக்கொள்ளும் கூட்டாத்தாரிடையிலும் ஒரு அரசியல் அரங்கேற்றமும் பண்பாட்டு கூட்டமும் உருவாகிறது. கூட்டுறவை உருவாக்க சில பிணங்கள் முனைகின்றனர். ஆனால் அதில் எல்லோரையும் ஒன்றிணைக்க முடிவதில்லை. காலம் உறைந்த நிலையில் ஏற்கனவே சொல்லப்பட்ட சொற்கள் மீண்டும் மீண்டும் உலவுகின்றன. காழ்ப்புகளும் பசப்புகளும் அச்சொற்களின் உருவமாகின்றன. கூட்டுறவு வாழ்வியலின் நீட்சியாக மட்டுமே வாய்க்கப்பெறும் என்பதை அபத்த உரையாடலின் வழியாக நிறுவுகிறார்.
வாழ்வின் வினைகளுக்கு பிரதிபலனாக மரணம் அமையும் எனும் சித்தாந்தத்திற்கு எதிராக வாழ்வின் நீட்சியாக மரணம் இடம்பெறும் என்பதை நாவல் பேசுகிறது. வாழ்வின் தீராத அத்தனை விஷயங்களையும் மரணமும் சுமக்கத் துவங்குகிறது. மேலும் நாவல் இறந்தவர்களைப் பேசினால் அதற்கு நிகராக அதன் அடியாழத்தில் உயிருடன் வாழ்பவர்களின் அன்றாடத்தை கேலி செய்கிறது. வாழ்வின் அபத்தத்தை எடுத்துரைக்கிறது. இறந்தவர்கள் குறித்து இருக்கும் கருத்தாக்கங்களையும், எதிர்மறையான எண்ணங்களையும் கேள்விக்குட்படுத்துகிறது. மறைந்தவர்களின் காலம் வாழ்பவர்களிடம் உறைந்துவிடுகிறது. அவர்கள் பேசிய சொற்கள் மட்டும் காலத்திற்கும் நிற்கிறது. அவற்றுடன் உரையாடும் தருணங்கள் வாழும் போது செய்யும் நற்செயல்களால் மட்டுமே சாத்தியப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் இந்நாவல் ஒரு நீதிக்கதை. ஆனால் எடுத்துக்கொள்ளப்படும் வடிவமும் மொழியும் நவீன இலக்கியத்தின் பெரும் அங்கமாக உருமாறிவிடுகிறது. வசைகளால் நிரம்பிய வாழ்க்கை மரணத்திலும் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறது. மரணம் எல்லோருக்கும் நிம்மதியை கொடுத்துவிடுவதில்லை. வாழ்வில் முற்றுபெறாத உரையாடல்களை மரணம் நீட்சிகொள்ள செய்கிறது. அதை புனைவடிவமாக அதிலும் நவீன கதையாடல்களில் பெரும் சவாலாக மார்ட்டீன் ஓ’ கைன் வடித்துள்ளார். ஆர்.சிவக்குமாரின் மொழிபெயர்ப்பில் நாவல் தமிழிலும் சிறப்பான வாசிப்பு அனுபவத்தை நல்குகிறது. வட்டார மொழியியல் பிரிவில் அயர்லாந்தில் சிறந்து வழங்கும் நாவலின் தன்மையை மொழி சிதைவுறாமல் தமிழாக்கியிருக்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பாளர் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் முன்னுரைகள் இந்நாவலின் பண்பாட்டு தளத்தில் வாசகர்களின் புரிதலை மேம்படுத்த நன்கு உதவுகிறது. இங்கிருக்கும் வழக்காற்று கதையாடல்களுக்கும் சவாலான புதினமாக அமைகிறது வசை மண்.
- காலச்சுவடு
இருதலைக்குருவி
வெயிலின் அதிகாலைக் கிரணங்கள் மேகங்களைக் கடந்து வீட்டின் பலகணியில் கசியத் துவங்கியிருந்தது. தூக்கம் கலையாத கண்களை சுருக்கியும் விரித்தும் வெறும் சுவற்றினை பார்க்கத் துவங்கியிருந்தார் சரவணன். அருகில் உறங்கிக் கொண்டிருந்த விஷ்ணு உறக்கத்தினூடே கைகளை பிசைந்து கொண்டிருந்தான். பார்வை அவனுக்கு அப்பாலிருந்த மனைவியின் மீது சென்றது. ஆழ்ந்த உறக்கம் புலரும் காலையை சற்றும் பொருட்படுத்தவில்லை என்பதை அறிந்தவுடன் மீண்டும் கண்களை கசக்கத் துவங்கினார்.
“கூவி…. ரெண்டு… கூவி”
புரியாத வார்த்தைகள் செவியினுள் விழ திரும்பிப் பார்த்தார். பிஞ்சுக் கைகளின் வழியே இரண்டு இரண்டு என யாருக்கோ காட்டிக் கொண்டிருந்தான். வாயினின்று கூவி எனும் வார்த்தைகள் மட்டும் வெளிவந்தபாடே இருந்தன. கைகளால் விஷ்ணுவின் முதுகை தட்டி,
“ஒண்ணு இல்லடா ராஜா… ஒண்ணும் இல்ல… தூங்கு தூங்கு”
விஷ்ணுவின் உறக்கம் மீண்டெழ படுக்கையினின்று கொட்டாவியுடன் எழுந்துகொண்டார். கடிகாரத்தை பார்க்கும் போது மணி ஐந்தே முக்கால் ஆகியிருந்தது. அந்த நேரங்காட்டி அவரிடம் ஒட்டியிருந்த தூக்கத்தை சட்டென பறித்தது.
ஆறு மணிக்கு கண்ணாடியை பார்க்கும் போதும் குளித்ததன் சாயல் தெரியாமல் தூக்கமே நிழலாடியது. மீண்டும் கண்ணாடியின் வழியே தெரிந்த நேரங்காட்டி அவரை சுறுசுறுப்பாக்கியது. கட்டிய துண்டுடன் ஃப்ரிட்ஜில் இருக்கும் மாவினை எடுத்துக் கொண்டு சமையலறை சென்றார். அடுப்பில் நெருப்பேற்றி அதன் மீது தோசைக்கல்லை வைத்தவுடன் ஜன்னலின் வழியே பார்வை வெளி சென்றது.
அது இரண்டடுக்கு வீடு. சரவணனுடைய வீடோ இரண்டாம் தளம். அங்கிருந்து பார்க்கும் போது ஒவ்வொரு காலையிலும் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளை அவரால் பார்க்க முடியும். ஏன் அதைப் பார்க்கிறோம் எனும் கேள்வி எழுந்தாலும் அதைப் பொருட்படுத்தாது மாடுகளைக் காண்பது அன்றாட வேடிக்கையானது. அதன் மீது அழுக்குகளை கொத்திக் கோண்டிருக்கும் காகங்களையும் எப்போதேனும் கொத்தவரும் குருவிகளையும் நோட்டம் விடுவார். அன்றும் ஒரு குருவி ஜன்னலின் ஓரத்தில் வந்தமர்ந்து கீச் கீச் என்றது. இரண்டொரு முறை அதை ரசித்தபின்னர் அரிசி போடலாமா எனும் எண்ணம் எழுந்தது. குருவி அமர்ந்திருக்கும் ஜன்னல் கம்பிக்கு கீழே அரிசி வைக்கப்பட்டிருந்ததால் அதை எடுக்க குனியும் போது குருவியின் சிறகுகள் பயத்தில் படபடத்தன. சத்தத்தால் தலையை திருப்பி பார்க்கும் போது குருவி பறந்திருந்தது. அடுத்த கணமே கவனங்கள் முழுக்க தோசையின் பக்கம் திரும்பிற்று.
ஆறாவது தோசையினை சுட்டு ஹாட் பாக்ஸில் வைக்கும் பொழுது மீண்டும் விஷ்ணுவின் மெல்லிய குரல் படுக்கையறையிலிருந்து கேட்டது. சற்று முன் கேட்ட குருவியின் சப்தமும் விஷ்ணுவின் குரலும் அவருக்கு ஒன்றாகவே இருந்தது. அடுப்பை குறைத்துவிட்டு விஷ்ணுவிடம் சென்றார்.
தூக்கம் கலைந்து படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். முகத்தில் அவனிடம் தெரிந்த சிரிப்பை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டே,
“என்னடா கண்ணா … தூங்கலையா ?”
“கூவி பாத்தேன் பா”
“அப்படியா ? எங்க பாத்தீங்க ? எழுந்து வர்றீங்களா நான் காட்றேன். கொஞ்ச நேரம் முன்னாடி கூட கிட்சனுக்கு வந்துச்சு. அது தான் எங்க என் விஷ்ணு ? அவனுக்கு என்னை ரொம்ப புடிக்குமே. . . அவன பாக்க வந்தேன்னு சொல்லிச்சு.”
கூறிக்கொண்டே விஷ்ணுவை தூக்கிக் கொண்டார். எட்டு வயது சிறுவனின் உடல் அதிகாலை நேரத்தில் கணமென இருந்தது. சமையலறை நோக்கி நகரும் போது,
“விஷ்ணு தூங்கறான்னு நான் சொன்னனா எந்திரிச்சதும் வர்றேன்னு உய்ய்னு பறந்துருச்சு”
அப்பாவின் தோள்களில் சாய்ந்து கொண்டே கரண்டி தோசையின் வட்டத்தில் ஊர்வதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். சட்டென காதுகளில் வார்த்தைகள் விழும்படி,
“எனக்கு அத பாக்கணும் பா”
“எந்திரிச்சுட்டல்ல. வரும். நேரா இங்க வந்து உங்கள பாக்குமாம். நீங்களும் குருவியும் தோசை சாப்பிடுவீங்களாம். சரியா ?”
தூக்கத்தின் மொழியுடன்,
“அது இல்லைபா. அந்த கூவி. அதுக்கு ரெண்டு தலை இருந்திச்சு”
அவன் காட்டிய இரு விரல்களை பார்த்து சிரிப்பு மட்டுமே வந்தது. அவனிடம் திரும்பி,
“ரெண்டு தலை குருவியெல்லாம் இல்லடா விஷ்ணு. குருவிக்கு ஒருதலை தான்”
முகம் இறுக ஆரம்பித்து,
“ஆனா நான் பாத்தேனே ?”
“விஷ்ணுக்கு எத்தன தலை இருக்கு ?”
நெற்றியில் இருக்கும் முடிகளை ஒதுக்கிவிட்டு தலையை சுட்டிக்காட்டி,
“ஒண்ணு. அப்பாக்கும் ஒண்ணு. அப்ப குருவிக்கும் ஒண்ணு தான இருக்கும் ?”
அதை அவனால் யோசிக்க முடியவில்லை. மீண்டும் தூக்கம் அவனுள் ஏற அப்பாவிடம்,
“இல்லன்னா ஏம்பா எனக்கு மட்டும் தூக்கத்துல வருது”
வார்த்தைகள் மட்டுமே அவரின் காதுகளுக்குள் நுழைந்தது. கனவு என்பதை விளக்க முயற்சித்து தோற்றார். அதற்குள் தோசை இடுவதில் சுவாரஸ்யமின்றி ஹாட் பாக்ஸினை மூடி வைத்தார். விஷ்ணுவை கீழிறக்கி,
“அத நாம அப்பறமா பேசலாம். இப்ப போய் பிரஷ் பண்ணுங்க. அப்பா சட்னி அரைச்சிட்டு வர்றதுக்குள்ள பிரஷ் பண்ணிருக்கணும் சரியா விஷ்ணு ?”
தூக்க கலக்கத்தினூடே சுவற்றைத் தடவிக் கொண்டு பாத்ரூமை அடைந்தான். பல் விளக்கும் போது கூட இரண்டு தலைகொண்ட குருவியின் நினைவே மேலோங்கியிருந்தது. மிக மெதுவாக பல் விளக்கிக் கொண்டிருந்தான். வாய் கொப்பளிக்கும் சாக்கில் குழாயினின்று வரும் நீரில் கைகளால் துழாவிக் கொண்டிருக்க அப்பாவின் கை குழாயை மூடியது.
“தண்ணீல வெளியாண்டா சளி புடிக்கும்.”
என்று கூறி குளிப்பாட்டத் துவங்கினார். நீரில் விளையாடினால் சளி பிடிக்குமெனில் ஏன் நீரில் குளிப்பாட்டுகிறார்கள் எனும் கேள்வி சிறு மூளைக்குள் தோன்றினாலும் மீண்டும் எண்ணங்கள் இரண்டு தலை கொண்ட குருவிக்கே சென்றது. முக்கால்வாசிக் குளியல் முடியும் போது,
“அப்பா கக்கா வருதுப்பா”
சரவணனின் முகம் கோபம் கொள்ள துவங்கியது. அதை கவனித்த விஷ்ணு இரண்டு விரல்களை மட்டும் மெதுவாக நீட்டத் துவங்கினான். இறுகிய முகத்துடனேயே,
“சரி இரு. முடிஞ்சவொடன கூப்டு. அம்மாவ எழுப்பிட்டு வர்றேன் சரியா ? அப்ப மாதிரி கொழாய திருகி வெளியாடிகிட்டு இருக்கக்கூடாது ?”
அப்பாவின் குரலுக்கு கட்டுண்டவனாய் தலையசைத்துக் கொண்டான்.
மனைவியின் புஜங்களை தொட்டு எழுப்ப முற்படும் போது முந்தைய நாளின் வேலைப்பளு உடலை நீங்கவில்லை என்பதை அறிந்து கொண்டார். லேசாக புஜங்களை ஆட்டி,
“சரண் மணி ஆச்சு. எந்திரி மா… சரண்”
இரண்டு இமைகளும் கடினப்பட்டு ஒன்றைவிட்டு ஒன்று பிரிய,
“என்ன நேரமாச்சு புதுசா ?”
அலைபேசியில் மணி ஏழரை என காட்டிக் கொண்டிருந்தது.
“ஏழு தான ஆவுது. ஏன் சும்மா என்னைய எழுப்புறீங்க ?”
“இன்னிக்கு விஷ்ணுக்கு ஸ்கூல் இருக்கு. ஃபர்ஸ்ட் டே. மறந்துட்டியா ?”
கழிவறையில் இருந்து விஷ்ணுவின் குரல் கேட்டது.
“எந்திரி மா எனக்கும் நேரமாச்சு. எந்திரி எந்திரி”
குளிப்பாட்டி முடித்து இடுப்பில் துண்டுடன் சோபாவில் உட்கார வைத்தார். தொலைக்காட்சியில் பொம்மைகள் ஊறத் துவங்கின. கலக்கி வைத்திருந்த பூஸ்டினை கொடுத்துவிட்டு ஸ்கூல் யூனிஃபார்மை இஸ்திரி போட ஆரம்பித்தார். இடையிடையே செவிகளில் விழுந்த பொம்மைப்படங்களின் தமிழ் வசனங்கள் அவரை கடுப்பேற்றின. நேரங்காட்டி அதையும் கடந்து போக பெரிதும் உதவிற்று. தூக்கத்திலிருந்து எழுந்து வந்த சரண்யா நேரே விஷ்ணுவின் கன்னத்தைக் கிள்ளி
“குட் மார்னிங்”
என இழுத்தாள்.
“அய்யே.. நான் குளிச்சிட்டென். நீ அழுக்கு அம்மா”
செல்லமாக கிள்ளிவிட்டு அவளுடைய காலைக்கடன்களை நோட்டம் விடத் துவங்கினாள். வாயில் பிரஷ்ஷுடன் கழிவறையின் வாசலிலிருந்து விஷ்ணு பார்த்துக் கொண்டிருக்கும் பொம்மை படத்தை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு நின்றாள். பின் பக்கத்தினின்று பைகள் சகிதமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் சரவணன்.
“சரண் அவனுக்கு டிரஸ் அயர்ன் பண்ணிட்டேன். டேபிள்ள சாப்பிடறதுக்கு இருக்கு ? அடுப்புல சாதம் வச்சிட்டேன். கொழம்பு மட்டும் வச்சிடு. அது கூட வேணும்னா. அவனுக்கு மத்தியானம் டிஃபனே பேக் பண்ணிட்டேன். நீ சாதம் எடுத்துக்கோ. கொழம்பு வேணாம்னா புளிக்காய்ச்சல் இருக்கு. கலந்து எடுத்துக்கிட்டு போ. ஆனா சாப்பிடாம இருக்காத டா. எனக்கு ரொம்ப நேரமாச்சு இன்னுக்கி”
“அவசரமா எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா ?”
“சாக்ஸும் ஷூவும் போடற வரைக்கும் தான் எனக்கும் உனக்கும் பேச நேரம் கெடைக்குது. ஆஃபீஸ்லயே செருப்பு போடுன்னு சொன்னாக்கூட நான் மாட்டேன்”
இருவரும் சிரித்தனர். சிரிப்பின் அர்த்தம் தெரியாமல் ஓரக்கண்ணால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. மீண்டும் அவன் பார்வை தொலைக்காட்சிக்கு சென்றது.
“அவனோட ரெண்டு மாசம் போனதே தெரியலைல ?. சட்டுனு ஸ்கூல் ஆரம்பிச்சிட்டாங்க”
“தலைவர் ஒண்ணாங்க்ளாஸ்.”
பேச்சினூடே பெருமிதம் தொனித்தது. இரண்டு கால்களிலும் ஷூ உள்நுழைந்துவிட்டதால் கிளம்ப எழுந்து கொண்டார். சரண்யாவிற்கோ கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என ஆசை இருந்தது. நான்கடி நடந்த சரவணன் திரும்பி,
“ஏம்மா.. ஸ்கூல்ல சொல்லி விட்டுட்டு வா. போன தடவ யூகேஜில உக்கார வச்சா சாப்டுட்டு தலைவர் எல்கேஜிலயே போய் உக்காந்துட்டாரு. இந்த தடவயும் அப்படியே பண்ணிடப்போறான்”
சொல்லிக் கொண்டே படிகளின் வழியே கீழிறங்க ஆரம்பித்தார். பேச்சினை முடிக்க அவளுக்கு துளியும் விருப்பமில்லை. அவளுக்கும் நேரங்காட்டி வேகமாகவே சென்று கொண்டிருந்தது.
எட்டரை மணி அளவில் தோசையினை கிள்ளி சட்னியில் தொட்டு அவனுக்கு ஊட்டத் துவங்கினாள். தொலைக்காட்சியின் பொம்மைகளினூடே கண்கள் ஸ்தம்பித்துக் கிடந்தன. பசியின் வேகத்தில் ஐந்தாறு வாய்கள் ருசியின் கவலையின்றி சென்றன. செல்லும் போது,
“அம்மா உனக்கு தெரியுமாம்மா ?”
“என்னது டா ?”
“கூவி பத்தி”
“அது கூவி இல்லடா. குருவி. இங்க தான் அப்பப்ப வருமே!”
“அது இல்லம்மா. அந்த கூவிக்கு ரெண்டு தலை இருக்கும். நீளமா இருக்கும்”
“அன்னிக்கு பார்க்குல பாத்தோமே கறுப்பா அந்த மாதிரியா ?”
“இதுக்கு ரெண்டு தலை இருந்துச்சே ?”
ஊட்ட வந்த அம்மாவின் கைகளை தடுத்து,
“போதும்மா”
“இன்னம் ஒரு வாய். ஒரே ஒரு வாய். அம்மாக்காக”
சாப்பிட்டவுடன் அடுத்த வாய் தோசையினை மறித்து,
“ஒண்ணுதானம்மா சொன்ன ?”
சரண்யாவின் குரல் கணீரென மாறியது.
“விஷ்ணு! ஒரு தோசை கூட முழுசா சாப்பிடல அதுக்குள்ள என்ன அடம் ? இந்த தோசை மட்டும் ஃபுல்லா சாப்டு”
விஷ்ணுவின் கண்கள் அம்மாவின் வார்த்தைகளுக்கு செவி மடுக்காமல் தொலைக்காட்சியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. சட்டென ரிமோட்டினை எடுத்து தொலைக்காட்சியை அணைத்தாள். விஷ்ணுவிடம்,
“இந்த தோசை மட்டும் ஃபுல்லா சாப்பிடு சாயங்காலம் கூட பார்க் போலாம்”
“நீ இப்படி தன் சொல்வ ஆனா முன்ன மாதிரி நான் தூங்குன பெறகு தான் வருவ. மறுபடியும் நாளைக்கு தான உன்ன பாப்பேன். அப்பறம் எப்படி என்னை பார்க்குக்கு கூட்டிட்டு போவ ?”
இரண்டு மாத விடுமுறை சிறுவனின் மனதில் சின்ன அசைவாக மாறியிருப்பது அவளின் பலகீனத்தை சீண்டிப் பார்த்தது. அவனுடைய கேள்விக்கு பதில் தெரியவில்லை. ஆனாலும் காரணமற்ற கோபம் மட்டும் தலை தூக்கி நின்றது. தொலைக்காட்சியின் ரிமோட்டை அழுத்திவிட்டு மீத தோசையை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள். தோல்வியின் ஸ்பரிசத்தை சுதாரித்துவிட்டு விஷ்ணுவிடம்,
“விஷ்ணு”
என்ன எனும் முனகல் மட்டுமே விஷ்ணுவிடமிருந்து வந்தது.
“அம்மா குளிச்சிட்டு வர்றேன். கப்போர்டுல இருக்குற புது ஷூ சாக்ஸ் எடுத்துகிட்டு வந்து போடுங்க அதுக்குள்ள”
வேகமான குளியலை போட்டுக்கொண்டு வெளிவந்தாள். கண்ணாடியைப் பார்த்து தலை சீவிக் கொண்டிருக்கும் போது அங்கங்கு உருவாகும் வெள்ளை முடியை நோட்டம் விட்டாள். விஷ்ணுவின் கேள்விகள் இடையிடையே எட்டிப்பார்த்தன. ஹாலிற்கு சென்று பார்க்கும் போது ஸ்கூலிற்கு செல்ல சாப்பாட்டு பை, நோட்டு புத்தகப் பை என தயாராகி நின்று கொண்டிருந்தான்.
அழைத்துக் கொண்டு இரண்டு தெரு தள்ளியிருக்கும் பள்ளியில் விட வெயிலோடு இருவரும் நடக்கத் துவங்கினர்.
“விஷ்ணுக்கு இன்னிக்கு புது ஃப்ரெண்ட்ஸ் கெடைப்பாங்களோ ?”
திட்டுகளின் கோபம் தணிந்து கள்ளச்சிரிப்பினோடு,
“ஆமா. நெறியா ஃப்ரெண்ட்ஸ் கெடைப்பாங்க”
“அப்ப சரண்யாக்கு ?”
“சரண்யாக்கு எல்லாம் இல்ல. நீங்க பெருசா இருக்கீங்கல்ல”
“ம்ம்ம்…(பொய்க் கோவத்துடன்) சரி புது ஃப்ரெண்ட்ஸ்கிட்ட என்ன பேசுவீங்க”
“காலைல வந்துச்சே கூவி. அத பத்தி”
“டிவில எதாவது குருவி பாத்தீங்களா ?”
“இல்லை”
“அப்பறம் ஏன் கூவி குருவின்னு சொல்லிகிட்டு இருக்க ?”
“காலைல பாத்தேன் மா”
“எங்க ?”
“தூக்கத்துல”
“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. சரியா ? யார்கிட்டயும் சொல்லிகிட்டு இருக்காத விஷ்ணு.”
அம்மாவின் குரல் கோவத்திற்கு மாறுவதை அவன் விரும்பவில்லை. முகத்தை திருப்பிக் கொண்டான். பள்ளி தனக்கருகில் வருவதை பார்த்துக்கொண்டே முன்னோக்கி நடந்தான். நெருங்கும் நேரத்தில் அம்மாவிடம்,
“நீயே வந்து கூட்டிட்டு போவியா ?”
“அம்மாக்கு வேலை இருக்குல்லடா புஜ்ஜி. அதனால கோகுல் ஆண்ட்டி வந்து கூட்டிட்டு போவாங்களாம். கோகுல் கூட வெளையாடுவீங்களாம். ஈவ்னிங் அப்பா வந்து விஷ்ணுவோட வெளையாடுவாராம்”
அந்த பதில் சமாதானமாக அமையவில்லை. எனினும் பள்ளி வந்ததால் அம்மாவின் கைகளை விட்டுவிட்டு உள்நோக்கி நடந்தான். மீண்டும் வீடு வரை நடக்க வேண்டுமே எனும் எண்ணம் அவளை களைப்படைய செய்தது. உடன் பணிபுரியும் அபிராமியை அழைத்தாள்.
“ஹலோ அபி.”
“சொல்லு என்ன விடிகலைல ஃபோன் பண்ற ?”
“சரியான நக்கல்டி. இன்னிக்கு விஷ்ணுக்கு ஸ்கூல்னு மறந்தே போய்ட்டேன். ரெண்டு மாசம் லேட்டா கெளம்பி சொகம் பாத்துட்டேன். இப்ப கடுப்பா இருக்குது. அட்லீஸ்ட் ஒரு வாரம் முன்னாடிலருந்து ப்ராக்டீஸ் பண்ணிருக்கணும்னு நெனைக்குறேன்.”
“எப்ப வர்ற ?”
“இப்ப மணி ஒன்போதரை. கீழ் வீட்ல சொல்லிட்டு. மத்தியான சாப்பாட்ட எடுத்துகிட்டு கெளம்ப வேண்டியது தான். கெளம்புனாலும் மஹேந்திரா சிட்டி வரைக்கும் டிராவல் இருக்கே. நெனச்சாலே மூச்சு வாங்குது”
“ஏதோ நீ வண்டி ஓட்டிகிட்டு வர்றா மாதிரி சொல்ற ?”
“அப்டி ஓட்னா அடுத்து ஐ.சி.யு தான். சரி டி. வீடு வந்திருச்சு. தனியா நடந்தா போர் அடிக்குமேனு தான் ஃபோன் பண்ணேன்”
“அடிப்பாவி. சரி வா. ஆஃபீஸ்ல பாப்போம்”
தனக்கான எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு கீழ்பகுதியில் இருக்கும் கோகுல் ஆண்டி வீட்டின் கதவை தட்டி,
“ஏங்க கோகுலோட விஷ்ணுவையும் கூட்டிட்டு,”
“இதெல்லாம் சொல்லணுமா சரண்யா. நான் கூட்டிட்டு வந்துடறேன்”
கைகளிலிருந்த டப்பாவை நீட்டினாள். அதைப் பெறும் போது,
“இது என்னது ? அட. மத்தியானம் சாப்பாடா ? ஏம்மா நாங்க என்ன சமைக்கறதேயில்லையா ?”
சிரித்துக் கொண்டே கேட்கப்பட்ட கேள்விக்கு சரண்யா,
“ஐயோ அதுக்கில்லீங்க. பழக்கம். மாத்திக்க முடியலை. எப்பவும் போல ஃப்ரூட்ஸ் இருக்கு”
“அவரு எங்க வேளச்சேரிலயா ?”
“வேளச்சேரினா எங்களுக்கு அது சொர்க்கமாச்சே. பள்ளிக்கரணைலருந்து நடந்தே போகலாம். ஆனா அவருக்கு படூர்ல.”
சாவியை நீட்டும் போது,
“பாத்துக்கோங்க. அவரு சாயங்காலம் வந்துடுவாரு”
“சரிம்மா பாத்து போய்ட்டு வா நான் விஷ்ணுவ கூட்டிட்டு வந்துடறேன்”
படிகளின் வழியே போகும் போது,
“பேரு தான் சொந்த வீடு. ஆனா எனக்கும் சொந்தமா இல்ல. அவருக்கும் சொந்தமா இல்லை. பையனும் உங்க வீட்ல தான் இருக்கான். எதுக்கு வாங்குனோன்னே தெரியல ஆண்ட்டி. சரி நான் வர்றேன். பை ஆண்ட்டி”
இருவரும் சிரித்துக் கொண்டே எதிர்ப்புறம் சென்றனர்.
***
பள்ளி ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆன பின்னர் கூட விஷ்ணுவின் வகுப்பிற்கு யாரும் வரவில்லை. அவ்வப்போது வந்து சில ஆசிரியைகள் எட்டிப் பார்த்து சென்றனர். வெகு நேரம் கழித்து வந்த ஆசிரியை எல்லோரிடமும் அவர்களின் பெயர்களை, விலாசத்தை, பிடித்த விளையாட்டு என எல்லாவற்றையும் கேட்டறிந்தாள். முதலிலிருந்து கவனித்த விஷ்ணுவிற்கு விஷயங்கள் அதிகமாக போக நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. எல்லோரின் முகத்தையும் சுற்றி முற்றி பார்த்து மனதினுள் பதிவு செய்ய யத்தனித்தான்.
அவரவர்களின் இரண்டு மாத விளையாட்டுகளை, பார்த்த பொம்மை படங்களை, பொம்மை நாடகங்களை, அதன் கதாபாத்திரங்களைப் போல பேசிக்காட்டி சத்தங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். சிலர் முதல் நாள் என்பதாலேயே அழுது கொண்டிருந்தனர். விஷ்ணுவிற்கு யாரிடமும் பேச தோன்றவில்லை. பள்ளி ஆரம்பித்து இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. அன்று அரை நாள் தான் என்பதால் சாப்பாட்டு பையினுள் ஸ்நாக்ஸ் டப்பா மட்டும் வைத்து அனுப்பியிருந்தனர். அதுவும் முடிந்து நேரங்காட்டி ஓடிக் கொண்டிருந்தது.
இன்னமும் சில மணி நேரத்தில் பள்ளி முடிந்துவிடும் எனும் நினைவு எல்லோரின் மனதிலும் உயிர்ப்புடன் இருந்தது. விஷ்ணுவின் அருகில் இருந்த சிறுவன் எழுந்து மெதுவாக நடந்தான். ஆசிரியையின் அருகில் சென்று,
“மிஸ் நான் வீட்டுக்கு போறேன் மிஸ்”
விஷ்ணு அவன் பேசுவதை கூர்ந்து கவனித்தான். நேரடியாக சென்று ஆசிரியையிடம் பேசிய தைரியம் அவனை கவர்ந்திருழுத்தது.
“ஏம்ப்பா ?”
“எங்க ஆயாகிட்ட போறேன் மிஸ்”
“கொஞ்சம் நேரம் கழிச்சு ஆயா வருவாங்கல்ல. அப்ப போலாம். சரியா ? ஆமாம் உங்க பேரென்ன ?”
“கமலக்கண்ணன் மிஸ்”
“சரிங்க கமல். இப்ப் போய் அமைதியா உக்காருங்க சரியா ?”
பதில் சொல்லாமல் வந்தமர்ந்தான். சில நேரம் அமைதியாகவே நேரங்கடந்தது.
விஷ்ணு அவன் அருகில் வந்து,
“உங்க ஆயா என்ன சொல்லுவாங்க ?”
இந்த கேள்வி கமலுக்கு பிடித்தமானதாக இருந்தது. சட்டென திரும்பி,
“எங்க ஆயா எல்லா கதையும் சொல்லுவாங்க. அவங்களுக்கு எல்லாம் தெரியும்”
“கூவி கதை சொல்லுவங்களா ?”
“கூவின்னா ?”
“பறக்குமே ? எல்லார் வீட்டுக்கும் வருமே ?”
“காக்கா தான் எல்லார் வீட்டுக்கும் வரும்”
“கூவியும் வரும். ஒரு கூவி இருக்கு. அதுக்கு ரெண்டு தலை இருக்கும். தெரியுமா ?”
“ஆமாவா ?”
“ஆமா ரெண்டு தலை”
“நீ பாத்திருக்கியா ?”
“இல்லை ஆனா ரெண்டு தலை இருக்கும். வேணா உங்க ஆயா கிட்ட கேக்குறியா ?”
ஆசிரியை கதை சொல்கிறேன் என் எழுந்ததால் ஒருவரோடொருவர் பேசுவது குறைந்து போனது. நேரம் வேகமாக ஓடி அவர்களுக்கான பள்ளியும் மதியப்பொழுதில் முடிந்தது. பள்ளியின் வாசலில் இருக்கும் சின்ன பூங்காவில் பெற்றோர்கள் காத்திருந்தனர். ஒவ்வொரு குழந்தைகளாக பள்ளி ஆயாக்கள் வழியே பெற்றோர்களிடம் வந்து சேர்ந்தனர். வகுப்பில் ஒவ்வொரு குழந்தையும் தன் பெயரை எப்போது ஆயா அழைப்பார் என ஏங்கி இருந்தனர். சிலரின் கண்களுக்கு தூக்கம் தலை தூக்கி இருந்தது. கமலையும் விஷ்ணுவையும் ஒரு சேர அழைத்தார்.
இருவரும் பூங்காவிற்கு சென்றனர். கமலின் ஆயாவும் கோகுல் ஆண்ட்டியும் அருகருகிலேயே நின்றிருந்தனர். குழந்தைகள் என்பதால் அவர்களின் சுட்டித்தனங்களை எல்லா பெற்றோர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கமல் ஆயாவிடம்,
“ஆயா இவன் பேரு விஷ்ணு. நீ கத சொல்வேன்னு அவன்கிட்ட சொன்னேன்”
வெட்கத்தில் கமலின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள்.
“நல்லா பேசுறாங்க பையன்.”
“செம வாலுங்க.” சிறுவர்களை சுட்டிக்காட்டி, “ரெண்டும் உங்க பையனா ?”
“கோகுல் என் மகன். விஷ்ணு மேல் வீட்டுக்காரங்க மகன். பாவம் இந்த காலத்துல ரெண்டு பேரும் வேலைக்கு போனாதா காலம் ஓடுது. எதோ நம்மால முடிஞ்ச உதவி”
“அது அரி. உங்களுக்கு உதவி. நான் செய்றது வேலை. சின்ன வயசுலருந்து இவன பாத்துட்டு வர்றேன். மவன் மாதிரி. இன்னமும் எத்தனை நாளிக்கு வருமோ இந்த சீவன் தெரியலை.”
மூவரும் பூங்காவினை சுற்றி விளையாடிக் கொண்டிருந்தனர்.
“அம்மா வரமாட்டாங்களா?”
“நீங்க கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னீங்களே அதே தான். அவங்க வேலை ரெண்டுங்கெட்டான். நைட் தான் வருவாங்க.” மெதுவான குரலில், “அப்பா இல்ல. பாவம். ஒத்த ஜீவனா வீட்ட சொமக்குது”
கோகுலின் அம்மாவிற்கு இக்கதைகள் வெறுப்பை உமிழ்ந்தன.
“இந்த காலம் எனக்கு புடிக்க மாட்டேங்குதுங்க. பேசி என்ன செய்ய!”
பெருமூச்சு விட்டு சிறுவர்கள் பக்கம் திரும்பி,
“என்ன ஆட்டம் போடுதுங்க. சாப்டு நல்ல தூங்கிடும் ரெண்டும்”
இருவரையும் அழைத்து,
“அவங்களுக்கு டாட்டா சொல்லுங்க. நாம வீட்டுக்கு போவோம்”
பள்ளியின் வாசலிலிருந்து இருவரும் எதிரெதிர் புறம் நடக்கலாயினர். நடக்கும் போது,
“ஆண்ட்டி உங்களுக்கு ரெண்டு தலை இருக்குற கூவி தெரியுமா ?”
கூவி எனில் குருவி என அவளாக சித்தரிக்க இரண்டொரு நொடிகள் ஆயின. அதற்குள் கோகுல்,
“அம்மா இவன் எங்கயாவது கார்ட்டூன்ல பாத்துட்டு கேக்கறான் மா”
“அப்படி எல்லாம் இருக்காது விஷ்ணு. குருவிக்கு எப்பவும் ஒரு தலை தான்”
வெயிலின் சூடு மூவருக்கும் நன்கு தெரிந்தது. அதோடு விஷ்ணுவின் முகத்திலும் அதிருப்தி தவழ்ந்தோடியது. திரும்பி பார்த்தான். தூரத்தில் கமலும் ஆயாவும் பேசியபடி நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் இரண்டு தலை கொண்ட குருவியைப்பற்றித் தான் பேசிக் கொண்டிருப்பர். நாளை கமலிடம் மறக்காமல் கேட்க வேண்டும் என சமாதானம் செய்து கொண்டு கோகுலுடன் கூடடைந்தான்.
காந்தியத்தின் எளிய அறிமுகம்
காந்தி குறித்த பலவேறு அறிமுகக் கையேடுகள் தமிழில் கிடைக்கின்றன. அவை பெரும்பாலும் காந்தியின் வாழ்க்கைச் சித்திரத்தை விவரிக்கின்றன. அவற்றிலிருந்து நீதி போதனைகளை கையாண்டு வாசகர்களுக்கான அறிவுரை கூறுபவர்களாக காந்தி குறித்து எழுதுபவர்கள் மாறிவிடுகிறார்கள். இதன் மறுபுறம் காந்தி மீதான வெறுப்பை உமிழ்பவர்கள் காந்தியின் வாழக்கை வரலாற்றிலிருந்து மேலோட்டாமான சுவடுகளை கையாண்டு தங்களின் அறத்தை நிறுவ முயல்கிறார்கள். இரண்டிலும் தென்படும் போதாமையின் முக்கிய கூற்று காந்தி வாழக்கையில் தென்படக்கூடிய காந்தியத்தை எளிமையாக கடந்துவிடுவது. காந்தியின் வாழக்கையையும் காந்தியக் கோட்பாட்டையும் ஒன்றாக மட்டுமே அறிந்து கொண்டிருப்பது தவறான புரிதலுக்கே இட்டுச் செல்லும். இதை சற்று எளிமையாக விளக்கலாம். காந்தியம் எனும் கோட்பாடு உலகின் பலவேறு மனிதர்களிடம் தென்படுகிறது. அவற்றில் ஒருவர் காந்தி. அவர் அதனை ஒரு போராட்ட முறையாக மாற்றினார். பலகோடி மனிதர்களை, அதுவும் எளிய மனிதர்களை ஒன்றுதிரட்டினார். நிலுவையில் ஏற்கனவே இருந்த வாழக்கை முறைக்கு புது அர்த்தம் சூட்டினார். அவர் அதன் முழு வெளிப்பாட்டை மக்களின் வழியே உலகிற்கு காண்பித்தவுடன் காந்தியம் எனும் புதிய பெயர் சூட்டப்படுகிறது. அது வெறும் போராட்ட வடிவம் மட்டுமன்று. மாறாக வாழ்வியல் கூற்று. இத்தன்மை பலவேறு மனிதர்களால் எளிமையாக புறக்கணிக்கப்படுகிறது.
இதைப் புரிந்துகொள்வதற்கு காந்தி குறித்த ஆசையின் கட்டுரைகள் வாசகர்களுக்கு பெரும் உதவி புரிகின்றன. இந்து தமிழ திசையில் தொடர்ச்சியாக காந்தி குறித்த கட்டுரைகளை, தொடரை எழுதி வந்தார். அதன் மொத்த தொகுப்பாக ‘என்றும் காந்தி’ எனும் நூல் வெளியாகியிருக்கிறது. இந்நூல் இரண்டு பாகமாக பிரிந்திருக்கிறது. முதல் பாகம் கிட்டதட்ட காந்தியின் மொத்த வரலாற்றையும் கால வரிசைப்படி சுருக்கமாக பேசுகிறது. ஆனால் அவையும் வெறும் வரலாறாக இல்லாமல் அவரின் வாழக்கைப்போக்கில் எங்கெங்கு எல்லாம் காந்தியம் வெளிப்பட்டிருக்கிறது எனுமிடத்தை வெளிச்சமிட்டு காட்டும் கட்டுரைகளாக அமைந்திருக்கின்றன. இரண்டாம் பாகம் காந்தியக்கூற்றுக்களின் விரிவாக்க கட்டுரைகளாக அமைகின்றன. அவருடைய கொள்கைகளை சிறு சிறு துண்டுகளாக்கி அதைப் பல்வேறு உதாரணங்கள் கொண்டு விளக்குகிறார். இரண்டு பாகங்களும் வாசித்து முடிக்கையில் காந்தியம் குறித்த விரிவான அறிமுகக்கையேடாக அமைகிறது. புதிதாக காந்தியை வாசிக்க விரும்புவார்களுக்கும் காந்தியின் கோட்பாடுகளை எங்கிருந்து புரிந்துகொள்ளலாம் எனும் குழப்பம் கொண்டவர்களுக்கும், அல்லது காந்தியின் மீதும் காந்தியத்தின் மீதும் முரண்பாடான பார்வை கொண்டவர்களுக்கும் இந்நூல் முக்கியமானதாகிறது. நூலின் இரண்டாம் பாகத்தில் சொல்லப்படும் விஷயங்களும் உதாரணங்களும் முதற்பகுதியிலேயே சொல்லப்பட்டாலும் அவற்றை வேறு சில உதாரணங்களுடன் ஒப்பிட்டு கூறுகையில் காந்தியத்தின் மீதான வெளிச்சம் பன்மடங்ககாகிறது.
மொத்த நூலிலும் என்னை வெகுவாக கவர்ந்தது ஒரு புகைப்படமும் அதை சுற்றி எழுதப்பட்ட கட்டுரையும். அந்நியத்துணி எரிப்பு போராட்டம் இந்தியாவில் நிகழத்தப்படுகிறது. அதனால் இங்கிலாந்திலிருக்கும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதையும் காந்தி அறிந்துகொள்கிறார். இந்நிகழ்வு நிகழந்து பல ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து செல்கிறார். இந்தியாவில் நிகழ்ந்த அந்நியத் துணி எரிப்பால் பாதிக்கப்பட்ட உழைப்பாளர்களை நேரில் சந்தித்து உரையாடுகிறார். அவருடைய எண்ணம் அந்த உழைப்பாளர்களே இந்த சுரண்டாலுக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதே. அந்த புகைப்படமும் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. எப்போதும் புன்னகையுடன் தென்படும் காந்தியின் புகைப்படத்துடன் உடனிருக்கும் அனைத்து உழைப்பாளர்களின் முகத்திலும் புன்னகை தவழ்கிறது.
சமகால புகைப்படகளில் தென்படும் புன்னகைகளுக்கும் இந்த புன்னகைக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு
காந்தியத்தின் வீச்சை நன்கு உணர்த்தவல்லதாய் அமைகிறது. காந்தியம் எதன் பலத்தில் வேரூன்றி இருக்கிறது எனில் உரையாடலில் மட்டுமே. காந்தி அனைத்து தரப்பினரையும் உரையாட அழைக்கிறார். உரையாடலின் வழியே பேதங்களைக் களைந்து சமாதானத்தை இரு தரப்பாரிடமும் கொணரமுற்படுகிறார். பல்வேறு இடங்களில் வெற்றியும் பெறுகிறார். ஒவ்வொரு தோல்வியின் போதும் ஏற்படும் இடர்பாடுகளை கணக்கில் கொண்டு அடுத்தடுத்த போராட்டங்களில் களைந்து எறிகிறார். ஒவ்வொரு போராட்டத்தின் போதும் பெருந்திரளாய் ஒன்றிணையும் மக்களின் கூட்டம் காந்தியின் உரையாடலிலேயே சாத்தியமாகிறது. சில கட்டுரைகளில் கூறுகிறார் காந்தியின் சன்னமான குரல் சில அடுக்கு மக்களைக் கூட தாண்டாது. ஆனால் பல அடுக்குகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய மக்களுக்கும் காந்தி ஒவ்வொரு
கூட்டத்திலும் சொல்லும் விஷயங்களும் சென்று சேர்ந்திருக்கிறது என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு காரணமாக அமைவது அவருடைய உடல்மொழி என்கிறார். உரையாடலுக்கு எதுவெல்லாம் சாத்தியமோ அத்தனையையும் அவர் தனக்கான ஊன்றுகோலாக அமைத்துக்கொள்கிறார்.
சமகால அரசியல் போக்குகளில் காந்தியத்தை பின்தொடர்வது முழுவதும் சாத்தியமற்றது. ஆனால் தனிப்பட்ட வாழக்கையில் சாத்தியமானதே. அதுவே சமூக அரசியலுக்கான முதற்படியாக அமையும். காந்தி எனும் மனிதர் நமக்கு தேவையில்லை. ஆனால் சமூகத்தில் நிலவும் அத்தனை இடர்பாடுகளுக்கும் ஓட்டு மொத்தமாக மக்களை எழுச்சி கொள்ள செய்ய அவருடைய சிந்தனை முறை தேவையானதே. அனைத்து துறைகளிலும் அதன் அவசியம் இருக்கிறது. ஆனால் அதை அறிந்துகொள்வதற்கான முதற்படி அவருடைய நீதி போதனைகளால் ஆன வாழக்கை வரலாறாக அமைவதே சாபக்கேடாக அமைகிறது. நவீன வாழக்கை நீதி போதனைகளை விரும்புவதில்லை. சாகசங்களை விரும்புகிறது. காந்தியையும் அவருடைய போராட்ட முறையையும் அதன் நியாயம் குன்றாமல் சாகசமாக விவரிக்க வேண்டிய கடமை நவீன காந்தியவாத எழுத்தாளர்களுக்கு முக்கியமாகிறது. அதன் தொடக்கமாகவே ஆசையின் இந்தக் கட்டுரை தொகுப்பை உணரமுடிகிறது.
நூலின் ஒவ்வொரு கட்டுரை குறித்தும் விரிவாக பேசும் அளவு விஷயங்கள் இருக்கின்றன. காந்தி குறித்த ஒவ்வொரு நூலும் அவர் பற்றி எனக்குள் இருக்கும் பிம்பத்தை கூர்படுத்துகிறது. இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக வாழந்தார் என்று நம்புவது ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல் கடினமாகத் தான் இருக்கிறது.
Subscribe to:
Posts
(
Atom
)